×

கொரோனா ஊரடங்கு உத்தரவால் ரூ.10 கோடி பெட்ஷீட்கள் தேக்கம்: ஆர்டர்கள் பறிபோகும் அபாயம்

ஈரோடு: கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பிலான பெட்ஷீட்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, ஈரோடு, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இத்தொழிலில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். உற்பத்தி செய்யப்படும் பெட்ஷீட்கள் ஈரோட்டில் உள்ள மொத்த ஜவுளி விற்பனையாளர்கள் மற்றும் ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு ஜவுளி சந்தையில் இருந்து பெட்ஷீட்களை வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், வெளிமாநில வியாபாரிகளும் வந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.


இந்நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவால் பெட்ஷீட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதோடு, ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்களையும் விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் குடோன்களிலேயே அடுக்கி வைத்து உள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் ஈரோட்டிற்கு வந்து ஜவுளிகளை மொத்தமாக வாங்கி செல்வது வழக்கம். ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக விற்பனை முற்றிலும் முடங்கி விட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளித்த போதிலும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஈரோட்டிற்குள் வரமுடியாத நிலை உள்ளது. கடந்த 2 மாதங்களாக பெட்ஷீட் உற்பத்தி இல்லாமல் இருந்தாலும், போக்குவரத்து வசதி இல்லாததால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்களை அனுப்பி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், ஆர்டர்கள் பறிபோகவும் வாய்ப்பு உள்ளது. ஈரோட்டில் மட்டும் ரூ.10 கோடி மதிப்பிலான பெட்ஷீட்கள் தேக்கம் அடைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Corona , Corona curfew, Rs 10 crore ,petitions
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...