×

தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் வாடி வதங்கும் தொழிலாளர்கள்

சேலம்: கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடிக்கிடக்கிறது. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வருவாய் இழந்து தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். வீடுதோறும் வண்ணத் தொலைக்காட்சிகளும், கைகளில் தவழும் ஆன்ட்ராய்டு செல்போன்களும் இன்றைய சூழலில் நமது பொழுதை எளிதாக களித்து விடுகிறது. ஆனால் இது போன்ற நவீனங்கள் நமக்கு கிடைக்கும் முன்பு, பொமுது போக்கும் மையங்களாக இருந்தவை திரையரங்குகள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, திரையரங்குகள் மனிதவாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்தது என்றால் அது மிகையல்ல. நூற்றுக்கணக்கான ஆதர்ஷ நாயகர்களையும், ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களையும் வண்ணத்திரையில் உலவவிட்டு, மக்கள் எண்ணங்களில் நிலைத்து நின்ற பெருமைக்குரியவை இந்த திரையரங்குகள்.

இப்படி கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் கோலோச்சிய திரையரங்குகள், தொழில் நுட்ப வளர்ச்சியாலும், காலத்தின் சுழற்சியாலும் அருகிப்போனது. ஆனாலும் அதன் சுவராஸ்யம் மிகுந்த சுவடுகள் இன்னும் நமது அடியொற்றி வருகிறது. இனியதொரு எதிர்காலத்திற்கு உத்திரவாதம் இல்லையென்றாலும், இதனால் வாழ்வு பெற்ற ஊழியர்கள், அதன் தொடர்புகளை துண்டிக்காமல் சொற்ப சம்பளத்திற்கு, தற்போதும் திரையரங்குகளில் பணியாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் அதகளம் செய்யும் ஊரடங்கு, திரையரங்குகளை நம்பி வாழும் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் பிழைப்புக்கு உலை வைத்துள்ளது. 50நாட்களுக்கும் மேலாக திரைகள் ஒளிராததால் இவர்களின் வாழ்வு, வறுமை என்னும் இருட்டு சூழ்ந்துள்ளது. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? என்ற கலக்கமே இப்போது எங்களிடம் மேலோங்கி நிற்கிறது என்கின்றனர் ஊழியர்கள்.
இது குறித்து தொழிலாளர் நலஅமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உள்ளன.

இந்த தியேட்டர்களில் 2500 சினிமா ஆபரேட்டர்கள், 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பட்டு வருகின்றனர். மார்ச் மாத இறுதியில் தியேட்டர்கள் மூடப்பட்டது. அன்று முதல் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். நலவாரியம் மூலம் தொழிலாளர்களுக்கு உதவிதொகை, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் திரையரங்குகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அதேபோல் நிவாரண பொருட்களை வழங்கியும் அவர்களது குடும்பத்தை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

வேறு தொழில் எதுவும் எங்களுக்கு தெரியாது
ஆபரேட்டர் சங்க பொதுச்செயலாளர் செங்குட்டுவன் கூறுகையில், ‘‘40 ஆண்டுகளாக தியேட்டர்களையே நம்பி வலம் வரும் ஆபரேட்டர்கள், உதவியாளர்கள், இதர தொழிலாளர்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் 2 மாதமாக தொடரும் ஊரடங்கு பெரும் சோதனையாக உள்ளது. ஒரு சில தியேட்டர் உரிமையாளர்கள் உதவித்தொகை வழங்கினர். ஆனால் அது வீட்டு வாடகைக்கே போதுமானதாக இல்லை. தற்போது ஊரடங்கு தளர்வால் தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்று தெரியவில்லை. எனவே ஒவ்வொரு தொழிலாளருக்கும் குடும்பம் நடத்துவதற்கு உகந்த தொகையை நிர்ணயம் செய்து, அரசு நிவாரணமாக வழங்க வேண்டும்,’’ என்றார்.

Tags : theaters , Faded workers ,theaters ,close
× RELATED PVR Inox திரையரங்குகளில் ஈஷா...