×

ஊரடங்கால் முடங்கிய மூங்கில் பொருட்கள் வியாபாரம்

* வறுமையில் வாடும் குடும்பங்கள்

புதுச்சேரி: நாம் என்னதான் பிளாஸ்டிக், எவர்சில்வர் என பல புதிய வகை பாத்திரங்களை பயன்படுத்தி வந்தாலும் நமது பாரம்பரிய பாத்திரங்களுக்கு அவை ஈடாகாது. குறிப்பாக மூங்கிலால் செய்யப்பட்ட பல பொருட்கள் காலம் தாண்டி நிலைத்து நிற்கும். இதனால் இதுபோன்ற பொருட்களை மக்களும் விரும்பி வாங்குவார்கள். மூங்கிலால் செய்யப்பட்ட வடிகூடை, காய்கறி வைக்கும் கூடை, பூஜை தட்டு உள்ளிட்ட பொருட்கள் எப்போதும் மக்கள் விரும்பும் பொருட்களாக உள்ளது. அதேபோல இன்று கம்பி வேலி, காம்பவுண்ட் என பல சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டாலும் மூங்கில் மரத்தை பிளந்து அதில் செய்யப்படும் வேலி வீட்டுக்கு ஒரு எழிலான தோற்றத்தை தரும். இரும்பால் செய்யப்பட்ட ஏணிகள் இன்று பல துறைகளில் கோலோச்சினாலும் மூங்கிலால் செய்யப்பட்ட ஏணிதான் கிராம மக்களுக்கு எப்போதுமே பெஸ்ட் சாய்ஸ். இத்தகைய பல பயனுள்ள பொருட்களைத் தரும் மூங்கில் தயாரிப்பு தொழில் தற்போதைய ஊரடங்கு உத்தரவால் கடும் பாதிப்பை அடைந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் குருமாம்பேட் பகுதியில் சாலையோரம் மனைவியுடன் மூங்கில் பொருட்களை தயாரித்து வரும் அப்பகுதியை சேர்ந்த சம்பத் கூறியதாவது: விழுப்புரம்தான் எங்கள் சொந்த ஊர். இங்கு வந்து குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டோம். மூங்கில் பொருட்கள் தயாரிப்பு தொழில் எங்களின் பாரம்பரிய தொழிலாக இருந்து வருகிறது. எங்களைப்போல திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, கோட்டக்குப்பம், ஆரோவில் போன்ற பகுதிகளிலும் இந்த தொழிலை சாலையோரமாக செய்து வருகிறோம். கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி, பண்ருட்டி, விழுப்புரம் மடப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மூங்கில் மரங்கள் இருக்கும். நாங்கள் நேரடியாக அங்கு சென்று மூங்கில் மரங்களை வாங்கி மினிலாரிகளில் ஏற்றி வருவோம். இதை சாலையோரங்களில் வைத்து பல அழகிய பொருட்களை தயாரித்து வருகிறோம். குறிப்பாக கிராம மக்களுக்கு இது மிகவும் பயனுள்ள பொருட்களாக இருக்கும். மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் கடிக்காமல் பாதுகாக்கும் குடலிகள், ஏணி, மூங்கில் பாய் போன்றவை கிராம மக்களால் விரும்பி வாங்கப்படும். அதேபோல இந்த பொருட்களை நகர மக்களும் வாங்குகிறார்கள்.

இந்த தொழிலை சாலையில் வைத்து செய்வதால் எங்களது அடுத்த தலைமுறைகள் இதை செய்ய தயங்குகின்றன. இதனால் எங்களோடு இந்த தொழில் அழியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனாவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடப்பதால் இந்த தொழில் மேலும் ஆட்டம்கண்டுள்ளது. முன்பெல்லாம் மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் கிடைக்கும். தற்போது அன்றாட செலவுகளுக்கே கிடைப்பதில்லை. கொரோனா பீதிக்கு முன்னதாக ரூ.25 ஆயிரம் கடன் வாங்கி மூங்கில் மரங்களை ஏற்றி வந்தேன். தற்போது அதன்மூலம் செய்த பொருட்களை விற்க முடிவதில்லை. குறிப்பாக எங்களுக்கு திருமணத்தை ஒட்டி பந்தலுக்காக நடும் முகூர்த்தக்கால், சுப நிகழ்ச்சிகளுக்கு சாப்பாடு வடிக்க பயன்படும் வடிகூடை, கோயில் கும்பாபிஷேகத்திற்காக பயன்படுத்தப்படும் பூ, பழம் வைக்கப்படும் தட்டு உள்ளிட்டவை அதிகளவில் வாங்கப்படும். தற்போது கோயில் மூடப்பட்டிருப்பதாலும், சுப நிகழ்ச்சிகள் நடக்காததாலும் இந்த பொருட்கள் விற்பனையே ஆவதில்லை. மற்ற பொருட்களுக்கும் இதே நிலைதான். இதனால் இந்த தொழிலை நம்பியிருக்கும் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் எங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் என்றார்.

Tags : Bamboo goods,business ,curfew
× RELATED தமிழ்நாடு முழுவதும் கோயில்களில்...