×

லாரி டிரைவரிடம் வழிப்பறி

ஸ்ரீபெரும்புதூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (45). கன்டெய்னர் லாரி டிரைவர். நேற்று முன்தினம் அன்பு, சென்னையில் இருந்து காப்பர் காயிலை லாரியில் ஏற்றி கொண்டு ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் இறக்கினார். பின்னர் இரவு சென்னைக்கு புறப்பட்டார். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் அருகே, விட்டுவிடாகை என்ற இடத்தில், நள்ளிரவில் சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு படுத்து தூங்கினார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், அவரை எழுப்பி, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதனால் அவர்களுடன் அன்பு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த ஒருவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அன்புவின் தலை மற்றும் காலில் சரமாரியாக வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த பர்ஸ் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பினர். அந்த நேரத்தில் அவ்வழியாக, சென்ற பொதுமக்கள், படுகாயமடைந்த அன்புவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : truck driver , truck driver
× RELATED லாரி ஓட்டுனரின் உதவியால் 40...