×

தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிரடி நடவடிக்கை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு கலைப்பு: இபிஎஸ், ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு

சென்னை: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு கலைக்கப்படுவதாக இபிஎஸ், ஓபிஎஸ் நேற்று திடீரென அறிவித்துள்ளனர். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு தயாராவதற்கே இதுபோன்ற அதிரடி மாற்றங்கள்செய்யப்பட்டுள்ளதாக அதிமுக முன்னணி தலைவர்கள் கூறினர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மற்றும் துணை நிர்வாக பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, சென்னை, வேலூர், கோவை, மதுரை என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலமும் பின்வரும் மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படும். சென்னை மண்டலம்: வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தி, காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்கள். மேலும், வேலூர் மண்டலம், கோவை மண்டலம், மதுரை மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இவைகளின் அடிப்படையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர்களாக கீழ்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

சென்னை மண்டலம் - அஸ்பயர் கே.சுவாமிநாதன் (சென்னை), வேலூர் மண்டலம் - எம்.கோவை சத்யன் (அதிமுக செய்தி தொடர்பாளர்), கோவை மண்டலம் - சிங்கை ஜி.ராமச்சந்திரன் (கோவை), மதுரை மண்டலம் - வி.வி.ஆர்.ராஜ் சத்யன் (பழைய விளாச்சேரி சாலை, மதுரை), ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை ஒட்டுமொத்தமாக கலைத்தது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். தற்போதுள்ள சூழ்நிலையில், தகவல் தொழில்நுட்ப பிரிவினரே அதிமுகவின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம், தற்போது சமூக இணையதளங்களில் வரும் தகவல்களே மக்கள் மத்தியில் எளிதில் சென்றடைகிறது. அதிமுகவில் தனியாரிடம் ஆலோசனை பெற்று தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பார்கள். மேலும், முதல்வர், துணை முதல்வரின் வாரிசுகளுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவில் முக்கிய பதவிகள் வழங்கவும் வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யவே தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதிமுகவில் ஊராட்சி செயலாளர்கள் பதவி காலி
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பு: அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய கழக அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ஊராட்சி கழக செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் விரைவில் மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : announcement ,Tamil Nadu Assembly Elections AIADMK ,Nadu ,AIADMK ,OPS , Tamil Nadu Legislative Assembly, AIADMK, EPS, OPS
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...