×

அரசு உத்தரவுக்கு பின்னரே ஆம்னி பஸ்சேவை துவங்கும்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆம்னி பஸ் சேவை, அரசு உத்தரவுக்கு பிறகே துவங்கும் என உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 4,000 ஆம்னி பஸ்கள் இயக்கத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக  ஆம்னி பஸ் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது: 144 தடை உத்தரவுக்கு பிறகு ஆம்னி பேருந்து தொழில்  சார்ந்த ஒரு லட்சம் தொழிலாளர்கள் மற்றும் ஆயிரம் பேருந்து உரிமையாளர்கள்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எங்களது ஆம்னி பேருந்து தொழில் சார்பாக  மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல கோரிக்கைகள் வைத்துள்ளோம். கோரிக்கைகள்  சம்பந்தமாக அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. 144 தடை உத்தரவுக்கு பிறகு  ஆம்னி பேருந்துகளை இயக்குவது சம்பந்தமாக மத்திய மாநில அரசுகள் எவ்வித  அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை தெரியப்படுத்தவில்லை. எனவே இது  சம்பந்தமான வழிகாட்டு நெறிமுறைகளை வந்தபிறகு ஆம்னி பேருந்து இயக்கம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும். அதுவரை பஸ்கள் இயக்கப்படாது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பிறகே தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Owners Association ,Omni , Government of Tamil Nadu, Omni Bus, Corona, Curfew, Owners Association
× RELATED தூத்துக்குடியில் மீனவர்கள் திடீர் மறியல்