×

அம்பன் புயல் கரையை கடப்பதால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அம்பன் புயல் கடும் புயலாக மாறியுள்ள நிலையில் இன்று மாலை மேற்கு வங்கத்தில் கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் தகிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான புயல் தற்போது கடுமையான புயலாக மாறியுள்ளது. இந்த புயல் தற்போது கொல்கத்தாவுக்கு 650 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.  இதுமேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து நகர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் மேற்கு வங்க கடற்கரையை இன்று மாலை அல்லது இரவில் கடும் தீவிரப் புயலாக கரையைக் கடக்கும். அதனால் வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும் ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும்.  

இதன் காரணமாக இந்தியா முழுவதுமே வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் காற்று தாமதமாக வரும். அதனால், வெயில் 42 டிகிரி முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.  அதனால் தமிழகத்தில் 6 நாட்களுக்கு வெப்பம் தகிக்கும். இதற்கு அடுத்த நிலையில் தென்மேற்கு பருவமழை மே இறுதி வாரத்தில் தொடங்கும் என்பதால் படிப்படியாக வெயில் குறையும்.  வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் முதல் ஜனவரி வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட தமிழகத்தில் எதிர்பார்த்த அளவில் மழை இருக்காது. தென் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்யும். மேலும் வெப்பச் சலனம் காரணமாக கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும். இன்று மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

150 ஆண்டுகளுக்கு பிறகு...
தமிழகத்தில் கடந்த 150  ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இதுபோன்ற ஒரு புயல் வங்கக் கடலில்  உருவாகியுள்ளது. அதேபோல கடந்த 1999ம் ஆண்டு இது போன்ற புயல்  வந்தபோது கடல் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை  இருந்தது. தற்போது இந்த புயல் கடுமை அடைந்துள்ளதால், கரையைக் கடக்கும்  போதும் வலுவிழக்க வாய்ப்பு இல்லை. வர்தா புயலைவிட இரண்டு மடங்கு இந்த  புயல் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Storm warming ,Tamil Nadu ,shore ,Amban ,Storm , Amban Storm, Tamil Nadu, Warming, Meteorological Center
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...