×

ஊரடங்கு உத்தரவை மீறினால் கொரோனா வைரஸ் வீடு வீடாக நுழையும்: அரசுக்கு தலைவலி

* சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை
* சென்னையில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரிக்க காரணம் தமிழக அரசுதான் என்று மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

சென்னை: சென்னையில் ஊரடங்கு என்பதே காணாமல் போய் மக்கள் கொத்து கொத்தாக கொரோனாவால் பாதிக்கப்படும் போதுதான் தமிழக அரசுக்கு அதன் வலி தெரியும் என சமூக ஆர்வலர்கள் பலர் தமிழக அரசை எச்சரித்துள்ளதோடு, முதல்வர் உத்தரவுகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். தமிழகத்தில் ஆரம்பத்தில் பிரைமரியில் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது கான்டாக் என்ற வகையில் குக்கிராமம் முதல் தமிழகத்தின் தலைநகரான சென்னை வரை ஆட்டி படைக்கிறது. நோய் ெதாற்று பரவல் தமிழகத்திலோ 10 ஆயிரத்தை கடந்து மின்னல் வேகத்தில் கடந்துள்ளது. ஆனால் ஊரடங்கு தளர்வு என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் மக்களை பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளது பெரும் தொற்றுக்கு அடிகோலி வருவதாக வீடுகளுக்குள் அரசு உத்தரவை முறையாக கடைபிடித்து முடங்கியிருக்கும் சில பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாகத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று தான் கூற வேண்டும். அதற்கு தமிழக அரசு சுட்டிக்காட்டும் ஒன்று மத்திய உள்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறையை கடைப்பிடிக்கிறோம் என்பதே. அது நெறிமுறைதானே தவிர அதை அப்படியே கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறித்து மாநில அரசுக்கு தான் மத்திய அரசை விட நன்றாகத் தெரியும். எனவே, வழிகாட்டி நெறிமுறைகளை குப்பையில் போட்டுவிட்டு ஊரடங்கை தளர்த்தாமல் இருந்து இருக்க வேண்டும். அதே வழிகாட்டியை கடைபிடித்தே தமிழகத்தில் டாஸ்மாக் திறந்ததின் விளைவு கொலை, கொள்ளை என்று குற்றங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. சென்னையில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரிக்க காரணம் தமிழக அரசுதான் என்று மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

   தமிழகத்தை பொறுத்தவரை 4 ம் கட்ட ஊரடங்கு தளர்வு என்பது 25 மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் போக்குவரத்து முதற்கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. கடைகள் எல்லாம் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் தனியார் தொழிற்சாலைகள், தனியார் பஸ், வாடகை கார் பயணம் எல்லாம் தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட இந்த மாவட்டங்கள் எல்லாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டது என்றே கூறலாம்.  ஆனால் சென்னையில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகள் கிடையாது என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை எதையும் கண்டு கொள்ளாமல் எப்படி மற்ற மாவட்டங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனரோ அதை விட ஒருபடி மேலாக சென்று கொரோனா என்பது சென்னையில் இல்லாதது போன்று மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி இருப்பதை பார்த்தால் சென்னை மக்களை கொரோனா எங்கு கொண்டு போய் விடப் போகிறதோ என்று கருத வேண்டியுள்ளது.

 சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகமாகிவிட்டது. சமூக இடைவெளி என்பதெல்லாம் தேடி தான் பார்க்க வேண்டும் . அந்த அளவில் தான் சென்னையில் ஊரடங்கு தளர்வு உள்ளது. மக்கள் முழுவதுமாக வெளியில் நடமாட தொடங்கி விட்டனர். கண்ணகி நகர் உள்ளிட்ட குடிசை பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், அப்பகுதி மக்களை எப்படி கட்டுப்படுத்துவது சாதாரண காரியமல்ல.   சென்னையில் 4ம் கட்ட ஊரடங்கு என்பது ஒட்டுமொத்தமாக தளர்ந்துவிட்டது என்றே கூறலாம். ஒட்டுமொத்த  மக்களும் வெளியில் வந்துள்ளதால் கொரோனாவை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது என்பது அரசுக்கு ஒரு சவாலான காரியம் தான். அப்படி இருந்தும் மக்களை கட்டுப்படுத்தும் நிலையில் அரசும் இல்லை என்பதையே தற்போதை சூழ்நிலை காட்டுகிறது.

 கொரோனாவால் சிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகும் போது தான் இந்நோயின் வலி என்ன என்பது மக்களுக்கு புரியும். முதல்வர் போட்ட உத்தரவை மக்கள் பின்பற்றவில்லையா அல்லது அரசு அதிகாரிகள் நடைமுறைபடுத்தவில்லையா என்பது ஒரு கேள்வி குறியாக உள்ளது.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:  கொரோனா வேகமாக பரவும் இந்த சூழ்நிலையில் சென்னைக்கு இத்தனை தளர்வுகளை கொண்டு வரக்கூடாது. எல்லாம் திறக்கப்பட்டு மக்களை வெளியில் கொண்டு வருகிறது இந்த அரசு. இப்படியே போனால் வீடு வீடாக இந்த வைரஸ் கிருமி நுழைந்து விடும். பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கும் போது மக்களுக்கு சிகிச்சை கூட கிடைக்காது. மக்கள் கடும்  அவதிக்குள்ளாக நேரிடும். கொரோனா விஷயத்தில் முதல்வர் போட்ட உத்தரவை மக்களும் மதிக்கவில்லை. அரசு அதிகாரிகளும் மதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும் என்றனர்.


Tags : house ,Corona ,government , Curfew, Coronavirus, Tamil Nadu Government
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...