கொரோனாவுக்கு தடுப்பு மருந்து முதல் முறையாக மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை முதல் முறையாக மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்த‍தில் அது வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அளித்து சாதகமான பலன் கிடைத்துள்ளதாக அதனை தயாரித்த ‘மாடர்னா’ நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் 30க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. நூற்றுக்கணக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு நோயாளிகளிடமும், தன்னார்வலர்களிடமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ’மாடர்னா’ மருந்து தயாரிப்பு நிறுவனம் அது கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆரோக்கியத்துடன் உள்ள 8 தன்னார்வலர்களுக்கு கொடுத்து கடந்த மார்ச் முதல் பரிசோதித்து வந்தது.

இதில் தடுப்பு மருந்தை பயன்படுத்தியவர்களின் உடல் நலனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதால், சாதகமான முடிவு கிடைத்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். முதல் கட்டமாக 8 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு இரண்டாவது கட்டத்தில் 600 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட உள்ளது. வரும் ஜூலை மாதம் 3வது கட்டமாக ஆயிரம் பேரிடம் நடத்தப்பட இருக்கிறது. இதனிடையே, அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், தனக்கு கொரோனா அறிகுறி இல்லை எனினும், கடந்த ஒன்றரை வாரமாக தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்,  ஜின்க் மருந்துகளை உட்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இங்கி. மருந்து தோல்வி குரங்குகளுக்கு பாதிப்பு

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், இங்கிலாந்தை சேர்ந்த  ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசி, குரங்களுக்கு போடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. ஆனால், இது தோல்வியில் முடிந்துள்ளது. இது தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் டாக்டர் வில்லியம் ஹசெல்டின் கூறுகையில், ‘‘`தடுப்பூசி போடப்பட்ட 6 குரங்குகளையும் பரிசோதித்தபோது, தடுப்பூசி போடப்படாத 3 குரங்குகளின் மூக்கில் எவ்வளவு கொரோனா வைரஸ் இருந்ததோ, அதே அளவுக்கு வைரஸ் இருந்தது.  இதனால் சோதனை முயற்சி தோல்வி அடைந்துள்ளது’’ என்றார்.

சீனாவும் கண்டுபிடிப்பு

சீனாவின் பீஜிங் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள மருந்து நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் குணமளிப்பதுடன், குறுகிய காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது தெரிய வந்துள்ளது. விலங்குகளிடம் மேற்கொண்ட பரிசோதனையில் இந்த மருந்து வெற்றிகரமான பலனை அளித்துள்ளது. வைரஸ் தொற்று செல்களை தடுக்க மனித உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படும் நடுநிலையான ஆன்டிபாடிகளை இந்த மருந்து உருவாக்குகிறது. இந்த ஆன்டிபாடிகள் தொற்று நோயைத் தடுக்கும் ஒரு சிறப்பு மருந்தாக செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>