×

வெளிமாநில தொழிலாளர் விவகாரம்: காங்கிரஸ் தலைமையில் 17 கட்சிகள் ஆலோசனை: நாளை மறுநாள் நடத்த திட்டம்

புதுடெல்லி: வெளி மாநில தொழிலாளர் பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் தலைமையில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தை நாளை மறுதினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வெளி மாநில தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் சாலைகளில் தங்கள் சொந்த ஊருக்கு, மூட்டை முடிச்சுகளுடன் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கு அவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

தண்டவாளம் வழியாகவும், சாலை மார்க்கமாகவும் செல்லும் போது விபத்தில் சிக்கி, ஏராளமான தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். எனவே, வெளிமாநில தொழிலாளர் பிரச்னையை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுமட்டுமின்றி உத்தர பிரேதேசம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மூன்று பாஜ ஆளும் மாநிலங்கள், தொழிலாளர் நலச்சட்டங்களில் சில முக்கிய திருத்தங்களை அறிவித்தன. குறிப்பாக, அதிக மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசம், அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களும் அடுத்த 3 வருடங்களுக்கு தற்காலிகமாக அமல்படுத்தப்படாது என்று வெளிப்படையாக அறிவித்தது.

இதனால், தொழிலாளர்கள் அடிப்படை உரிமை கேள்விக் குறியாகி உள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசிக்க உள்ளன. சோனியா காந்தி தலைமையில் நாளை மறுதினம் இக்கூட்டத்தை கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒத்த கருத்துடைய 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளன.


Tags : Congress , External Workers, Congress Leadership, Corona, Curfew
× RELATED காங்கிரஸ் கட்சிக்கும், சீன...