×

கேரளாவில் நாளை மதுக்கடைகள், பார்கள் திறப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை முதல் மதுக்கடைகள் மற்றும் பார்கள் திறக்கப்பட உள்ளன. கேரளாவில் லாக்-டவுன் அறிவிப்பதற்கு முன்னதாகவே மதுக்கடைகள் பூட்டப்பட்டன. அதன்பிறகு டாக்டர்களின் சான்றிதழ் பெற்று விண்ணப்பிப்பவர்களுக்கு மது வழங்கலாம் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்ப அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு டெல்லி, கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோதும் கேரள அரசு கண்டுகொள்ளவில்லை. மதுக்கடைகள் மூடிய நிலையிலேயே காணப்பட்டன. இந்த நிலையில் கேரளாவில் தற்போது கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதுபோல மதுக்கடைகள் மற்றும் பார்களை திறக்க கேரள அரசு ஏற்கனவே தீர்மானித்திருந்தது. ேமலும் கூட்டத்தை கட்டுப்படுத்த செல்போன் செயலி மூலம் மது விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை உருவாக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து நாளை முதல் கேரளாவில் உள்ள 301 அரசு மதுபானக்கடைகள் மற்றும் 800க்கும் மேற்பட்ட பார்களிலும் மது விற்பனை தொடங்கும். இந்த செயலி மூலம் டோக்கன் பெற்று குறிப்பிட்ட கடையில் சென்று மது வாங்கி கொள்ளலாம். காலை 9 முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை நடக்கும். ஆனால் பார்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும். அமர்ந்து மது அருந்த அனுமதியில்லை.
இதுபோல சலூன் மற்றும் அழகு நிலையங்கள் இன்று முதல் திறந்து செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்குள் அரசு பஸ்கள் இயக்கம்
ேகரளாவில் நோய் தீவிரம் உள்ள பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்து தொடங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 50 சதவீத பயணிகள் மட்டுமே பஸ்களில் அனுமதிக்கப்படுவர். மேலும் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. ஆனால் கட்டண உயர்வு குறைவாக இருப்பதால் தங்களால் பஸ்களை இயக்க முடியாது என கேரள தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சங்க செயலாளர் கோபிநாத் கூறுகையில், அரசு தற்போது அறிவித்துள்ள 50 சதவீத கட்டண உயர்வுடன் பஸ்களை இயக்கினால் எங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படும். பாதி பயணிகளை மட்டுமே அனுமதித்து பஸ்களை இயக்கினால் டீசலுக்கான பணம்கூட கிடைக்காது. எனவே கட்டணத்தை இருமடங்கு உயர்த்தும்படி அரசிடம் கோரியிருந்தோம். மேலும் டீசலுக்கான வரியை ரத்து செய்து மேலும் பல சலுகைகள் அளித்தால் மட்டுமே எங்களால் பஸ்களை இயக்க முடியும் என்றார்.

Tags : Opening ,Kerala , Kerala, Brewery, Bars, Lock-Down
× RELATED சென்னை மதுரவாயல் அருகே போலீஸ் காரில்...