×

அம்பன் சூப்பர் புயல் வலுவிழந்து கடும் சூறாவளியானது: ஒடிசா, மே.வங்கத்தில் 14 லட்சம் பேர் வெளியேற்றம்

* வங்காள விரிகுடாவில் 1999ம் ஆண்டுக்கு பின்னர் சூப்பர் புயலாக அம்பன் உருவாகி உள்ளது.
* கடலில் புயலின் காற்றின் வேகம் 200-240 கி.மீ. வேகம் இருக்கும். இது வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது.
* அம்பன் புயல் உம்பன் என்று தாய்லாந்து மொழியில் அழைக்கப்படுகின்றது. இதற்கு வானம் என்று பொருள். அடுத்து வரும் புயலுக்கு நிசார்கா என வங்கதேச பெயர் வைக்கப்படும்.

புதுடெல்லி: தெற்கு வங்கக்கடலில் உருவான  அம்பன் புயல்  கடும் சூறாவளி புயலாக மாறி மேற்கு வங்கம் ஒடிசா இடையே இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இரு மாநிலங்களிலும் சுமார் 14 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.   
வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள  அம்பன் புயல், சூப்பர் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுவிழந்து கடும் சூறாவளி புயலாக மாறியுள்ளது. வடக்கு-வடகிழக்கு திசையில் இது நகர்ந்து வருகிறது. வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில், ஒடிசாவின் தெற்கு பாரதீப்க்கு 480 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் தென்மேற்கு திகாவுக்கு 630 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் தென்மேற்கு கேபுபாராவுக்கு 750 கி.மீ. தொலையிலும் மையம் கொண்டுள்ளது.
 
மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்க தேசத்தின் ஹதியா இடையே இன்று பிற்பகல் அல்லது மாலை அம்பன் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்பன்  புயல் கரையை  கடக்கும்போது  மணிக்கு 155 முதல் 165 கி.மீ. முதல் வேகத்தில் காற்று வீசக்கூடும். கடலோர மாவட்டங்களில் கனமழை  மற்றும் மணிக்கு 185 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசக்கூடும். அப்போது 4 முதல் 5 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலின் நகர்வானது ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள டோப்ளர் வானிலை ரேடார் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

அம்பன் புயலினால் ஒடிசாவின்  பூரி, கேந்திரபாரா, ஜகத்சிங்பூர் மற்றும் குர்தா மாவட்டங்கள் மிதமான மழை பொழிவை பெறும், ஜஜ்பூர் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்கள் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில், புயலை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா தலைமையில் தேசிய பேரிடர் மேலாண் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஒடிசா தலைமை செயலாளர், மேற்கு வங்க மாநில உள்துறை செயலாளர், உள்துறை, பாதுகாப்பு மற்றும் கடற்படை, மின்சாரம், தொலை தொடர்பு, சுகாதாரம், தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்து கொண்டனர்.  மேற்கு வங்கத்தில் கிழக்கு மெடினிபூர், தெற்கு மற்றும்  வடக்கு 24 பர்கனாஸ், அவுரா, ஹூக்ளி, மற்றும் கொல்கத்தா மாவட்டங்கள் அம்பனால் பாதிக்கப்படும். கடந்த 2019 நவம்வர் 9ம் தேதி மேற்கு வங்க கடற்கரையை தாக்கிய புல்புல் சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தை விட அம்பன் புயல் பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.

இதேபோல், மேற்குவங்கத்தில் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இரு மாநிலங்களிலும், உணவு தானியங்கள், குடிநீர், மருந்து மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 தேசிய பேரிடர் படைப்பிரிவினர் இரு மாநிலங்களுக்கும் அனுப்பப்்பட்டுள்ளன.

Tags : Odisha , Amban Super Storm, Hurricane, Orissa, May
× RELATED பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல்...