×

மனதை உருக்கும் தந்தை பாசம் பெற்ற குழந்தையை பார்க்க லாரியின் கீழ் பயணித்த வாலிபர்

* ஸ்டெப்னியில் மறைந்து சென்றபோதும் அதிர்ஷ்டம் இல்லாததால் போலீசிடம் சிக்கினார்

சென்னை: கேரளாவில் பிறந்துள்ள தனது குழந்தையை பார்க்க லாரியின் அடியில் உள்ள ஸ்டெப்னி டயரில் பதுங்கி சென்ற இளைஞர் போலீஸ் பிடியில் சிக்கினார்.  கொரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரயில், பஸ்கள், லாரி, கன்டெய்னர் லாரிகள் என விதவிதமான பயணத்தின் மூலம் வீடு செல்ல முயற்சித்து வருகின்றனர். இவர்களில், தந்தை அந்தஸ்தை அடைந்த இளைஞர் ஒருவர் புதிதாக பிறந்த தனது குழந்தையை பார்ப்பதற்காக விபரீதமான முறையில், த்ரில் அனுபவங்களுடன் கேரளாவுக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த இளைஞர் ராஜூ. இவரது மனைவி தலைப் பிரசவத்துக்காக கொல்லம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது, ராஜூ தென்காசியில் சிக்கி கொண்டார். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் அவரால் கேரளா சென்று தனது குழந்தையை பார்க்க முடியாத நிலை. இதனால், கேரளா செல்ல  இ பாஸ் கேட்டு தென்காசியில் விண்ணப்பித்தார். ஆனால், அதிகாரிகள் பாஸ் வழங்க மறுத்து விட்டனர். ஆனாலும், தனது புது முதல் வாரிசை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று துடித்தார். லாரியில் பதுங்கி கேரளா சென்றுவிடுவது என முடிவு செய்தார்.

இதற்காக, தமிழக-கேரள எல்லைக்கு சென்று நோட்டமிட்ட அவர், கேரளாவுக்கு மரக்கட்டைகள் ஏற்றி சென்ற லாரியை பார்த்தார். லாரியின் அடியில் பொருத்தப்பட்டுள்ள ஸ்டெப்னி டயரில் டிரைவருக்கு தெரியாமல் பதுங்கிக் கொண்டார். புளியரை சோதனை சாவடியை கடந்த போதும் லாரிக்கு அடியில் பதுங்கியிருந்த அவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. கேரள எல்லையான ஆரியங்காவு சோதனை சாவடியிலும் போலீசார் அதிரடியாக சோதனையிட்டனர். அப்போதும், அடியில் பதுங்கியிருந்த ராஜூவை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இனி நம்மை யாரும் பிடிக்க முடியாது என நினைத்திருந்த ராஜூவுக்கு சோதனை ஆரம்பமானது. சாவடியில் இருந்து கிளம்ப போலீசார் ரைட் கொடுத்ததும், லாரி வேகமாக புறப்பட்டு சென்றது. அப்போது தான், ஸ்டெப்னி டயரில் ராஜூ  பதுங்கி இருந்ததை பார்த்து விட்டார் ஒரு போலீஸ்காரர்.

உடனே, போலீசார் பைக்கில் லாரியை துரத்திச் சென்று, அடியில் ஒட்டிக் கொண்டிருந்த ராஜூவை பிடித்தனர். அப்போதுதான், லாரிக்கு அடியில் ஒருவர் பயணம் செய்ததே லாரி டிரைவருக்கு தெரிந்தது. இப்போது, புனலூர் மருத்துவமனையில் ராஜூ 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். குழந்தையை பார்க்கும் ஆசையில் சென்ற அவரது பயணம் எல்லையை தொடும் முன்பே முடிவுக்கு வந்துவிட்டது. அதோடு, தனிமை முகாமிலும் சிக்கிக் கொண்டார்.

Tags : Kerala, child, youth
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...