×

மக்கள் பக்கம் நிற்கின்ற அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு திமுக துணை நிற்கும்

* பத்திரிகை நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: “மக்கள் பக்கம் நிற்கின்ற அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, தி.மு.க. துணை நிற்கும்” என்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த பத்திரிகை நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில், அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.

இதுகுறித்து, இந்திய பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை என்னுடைய கவனத்திற்கும் கொண்டு வந்து, அச்சு ஊடகங்கள் வழக்கம்போல மக்களின் குரலாக செயல்படுவதற்கு திமுக துணை நிற்க வேண்டும் என்ற வேண்டுகோளினை நேரில் தெரிவிப்பதற்காக மூத்த பத்திரிகையாளர்களான தினமலர் ஆதிமூலம், இந்து என்.ராம், தினகரன் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் சந்தித்து, கோரிக்கை கடிதத்தை அளித்தனர். அதில், அவர்கள் மூவருடன், தினத்தந்தி பாலசுப்பிரமணிய ஆதித்தன், இந்தியன் எக்ஸ்பிரஸ் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர்.
நோய்த் தொற்று குறித்தும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் குறித்து, சமூக வலைதளத்தின் பரப்பு அதிகரித்துவரும் இந்தக் காலத்தில், மக்களிடம் உண்மைச் செய்திகளை, நடுநிலையோடு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள அச்சு ஊடகங்களான பத்திரிகைகளின் தேவை மிகவும் அதிகம்.

அவை நெருக்கடிக்குள்ளாவதிலிருந்து மீளும் வகையில், மத்திய அரசு, பத்திரிகை அச்சுக் காகிதம் மீதான வரியைக் குறைக்கவேண்டும், அரசு விளம்பரங்கள் தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை உடனடியாக பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும், காலத்தின் தேவை கருதி அரசு விளம்பரக் கட்டணத்தை நூறு விழுக்காடு அளவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும், இவைதான் பத்திரிகைத் துறையின் முக்கியமான கோரிக்கைகள். பிரதமர் நரேந்திர மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கைகள் நிறைவேறிட திமுக துணை நிற்கும் என்ற உறுதியினை அவர்களிடம் வழங்கினேன். , ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலமாக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 17 லட்சம் அழைப்புகளைப் பெற்று, அவற்றை நிறைவேற்றியுள்ளோம். 165 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களின் பசியாற்றிடும் வகையில், 36 நகரங்களில் 28 லட்சம் பேருக்கு உணவு வழங்கியதையும் அவர்களிடம் தெரிவித்தேன்.

பொருளாதாரத்தை மீட்க, பிரதமர், 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு என்று பிரகடனம் செய்தார். நிதி அமைச்சர் தொடர்ந்து, திட்டங்களையும், சட்டத் திருத்தங்களையும், மாநில உரிமைகள் மீதான தாக்குதல்களையும், அறிவித்திருக்கிறார். அது ஜிடிபி-யில் 10 சதவீதம் அல்ல; வெறும் 0.91 சதவிகிதம் தான் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். வேறு பல “ரேட்டிங்” நிறுவனங்களும் இதை  உறுதி செய்திருக்கின்றன. நிவாரண உதவியாக ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அதிமுக அரசிடம் பல முறை கேட்டுப் பார்த்துவிட்டோம். அகில இந்திய காங்கிரஸ் கட்சி 7,500 ரூபாய் வீதம் 13 கோடி குடும்பங்களுக்கு நிவாரணமாகக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துவிட்டார்கள்.

அ.தி.மு.க. அரசோ, மத்தியில் உள்ள பா.ஜ. அரசோ, மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவை உணர்ந்ததாகத் தெரியவில்லை என்பதைப் பத்திரிகையாளர்களிடம் எடுத்துரைத்து, இவற்றை அச்சு ஊடகங்கள் முழுமையாக வெளிக்கொண்டு வந்து, அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து, மக்களுக்கு உதவிகள் கிடைத்திடச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிவித்தேன். மக்கள் பக்கம் நிற்கின்ற அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகப் பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, திமுக நாடாளுமன்ற மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள்  நிச்சயம் துணை நிற்பார்கள்-பிரதமரிடம் இதனை வலியுறுத்துவார்கள் என்ற உறுதியினையும் வழங்கினேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பணியில் அலட்சியம்
திமுக ஆட்சியில் இருந்தாலும்  இல்லாவிட்டாலும், எப்போதும் மக்கள் பக்கம் நின்று அவர்தம் நலனைப்  பாதுகாக்கின்ற இயக்கம் என்பதற்கு இந்தப் பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட  பணிகளை எடுத்துக்காட்டிய அதே வேளையில், மத்தியிலும் மாநிலத்திலும்  ஆளுகின்ற கட்சிகள், தாங்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய நடவடிக்கைகளில்  காட்டிய அலட்சியத்தையும், தாமதத்தையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும்  நடுநிலை தவறாத அச்சு ஊடகங்களான பத்திரிகைகள் தான் தொடர்ந்து வெளிக்கொண்டு  வரவேண்டும் என்பதையும் எடுத்துரைத்து விளக்கினேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,crises , Print media, PM, DMK, MK Stalin
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...