×

ஊரடங்கு காலம் முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 407 அம்மா உணவகங்களில் இன்று முதல் ஊரடங்கு காலம் வரை விலையில்லாமல் உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டு  வரும் திட்டப்பணிகள் குறித்தும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகள் மத்தியில் பேசியதாவது :

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 407 அம்மா உணவகங்களில் நாளை முதல் (இன்று) ஊரடங்கு காலம் வரை விலையில்லாமல் உணவு வழங்க  முதல்வர் உத்தரவிட்டுள்ளதால் உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் குடிசைவாழ் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தற்பொழுது வரை 8 லட்சம் நபர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.  அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டு திட்ட இலக்கை 28.2.2021க்குள்ளும்,  2019-20 முடிய நிலுவையில் உள்ள இலக்கு முழுவதையும் 31.12.2020க்குள்ளும் முடிக்க வேண்டும்.

நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்ட அனைத்து சுயஉதவிக் குழுக்களுக்கும் சுழல் நிதி 10,000 மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு சுழல் நிதியாக 50 ஆயிரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுபாடின்றி நாள்தோறும் குடிநீர் வழங்க முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : SB Velumani ,restaurant ,Amma , Curfew, Amma Restaurant, Free Food, Minister SB Velumani
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...