×

வெளிமாநில தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு உபி அரசு முட்டுக்கட்டை

* அரசியலாக்குவதாக பிரியங்கா குற்றச்சாட்டு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துச்  செல்வதற்காக ஆயிரம் சிறப்பு தனியார் பேருந்துகளை இயக்கும் காங்கிரசின்  திட்டத்துக்கு, மாநில அரசு பல்வேறு வகைகளில் முட்டுக்கட்டை போடுவதால்  இருதரப்புக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை உபி. அரசு  அரசியலாக்குவதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இதனால், பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பல லட்சம் வெளிமாநில  தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரயில்கள்,  பஸ்கள், லாரி, வேன், கன்டெய்னர் லாரிகள் என பல்வேறு வகைகளில் சொந்த ஊர்  திரும்பி வருகின்றனர். இவற்றில் இடம் கிடைக்காத அல்லது பணம் இல்லாதவர்கள்  பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்கின்றனர்.

இவர்களின் நிலைமை மிகவும்  பரிதாபமாக இருக்கிறது. மேலும், இவர்கள் தண்டவாளங்கள், சாலைகளில் நடந்து  செல்லும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் விபத்துகள் ஏற்பட்டு, இதுவரை  நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். நேற்று கூட, பீகாரில்  நடந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில்  சிக்கியுள்ள பல்வேறு மாநில தொழிலாளர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு  அழைத்துச் செல்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின்  உத்தரவுப்படி, ஆயிரம் தனியார் பேருந்துகளை இயக்க காங்கிரஸ் ஏற்பாடு  செய்துள்ளது. ஆனால், இதற்கு உத்தர பிரதேச அரசு அனுமதி அளிப்பதில் பல்வேறு  சந்தேக கேள்விகளை எழுப்பி முட்டுக்கட்ைட போட்டு வருகிறது.

இதனால், இந்த  விவகாரத்தில் இம்மாநில அரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி மோதல்  ஏற்பட்டுள்ளது.  இந்த பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கும்படி கோரி,  மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா காந்தி கடந்த சனிக்கிழமை  கடிதம் எழுதியதோடு, வீடியோ பதிவு மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தார். இது  தொடர்பாக பிரியங்காவுக்கு உத்தர பிரதேச அரசின் உள்துறை கூடுதல் தலைமை  செயலாளர் அவனிஷ் அவாஸ்தி எழுதிய கடிதத்தில், இயக்கப்பட சிறப்பு பேருந்துகள்  மற்றும் அதன் ஓட்டுனர்களின் விவரங்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்  கொண்டார்.  இதற்கு பிரியங்கா காந்தியின் செயலாளர் சந்தீப் சிங்  எழுதியுள்ள பதில் கடிதத்தில், ‘உத்தரப்பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ கடிதம்,  திங்கள் இரவு 11.40 மணிக்கு இ-மெயில் மூலமாக கிடைத்தது.

ஆயிரம்  பேருந்துகள், அதற்கான ஆவணங்களை லக்னோவில் காலை 10 மணிக்கு ஒப்படைக்கும்படி  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலைகளில் நடந்து  செல்கின்றனர், மேலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எல்லைகளில்  திரண்டுள்ளனர். ஆயிரம் பேருந்துகளை தங்களின் ஆய்வுக்கு அனுப்புவது என்பது  நேரத்தையும், பணத்தையும் வீணாக்குவது மட்டுமின்றி, ஏழை மக்களுக்கு எதிரான  தங்கள் அரசின் மனிதாபிமானமற்ற மனப்போக்கையும் காட்டுவதாக உள்ளது. அரசின்  இச்செயல், அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. அரசு இதை  அரசியலாக்குகிறது. எங்களின் ஏழை தொழிலாள சகோதரர்கள், சகோதரிகளுக்கு உங்கள்  அரசு உதவுவது போல் தெரியவில்லை,’ என்று கூறப்பட்டுள்ளது. உபி. அரசுக்கும் காங்கிரசுக்கும் இடையே நடக்கும் இந்த மோதல், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்டோ, கார் பதிவு எண்கள்
உத்தர  பிரதேச அரசின் செயல்பாடு குறித்து விமர்சித்து பிரியங்காவின் செயலாளர்  சந்தீப் சிங் எழுதியுள்ள கடிதத்துக்கு, மாநில கூடுதல் தலைமை செயலாளர் அவனிஷ் அவாஸ்தி உடனடி பதில் கொடுத்துள்ளார். பிரியங்காவுக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில், ‘லக்னோவில் பேருந்துகளை ஒப்படைக்க முடியாத உங்களின் இயலாமையை ஏற்கிறோம். கவுசாம்பி, சகிபாபாத்தில் 500 பேருந்துகளையும், கவுதம் புத் நகரில் 500 பேருந்துகளையும் நிறுத்துங்கள்.

அந்தந்த மாவட்ட  கலெக்டர்கள் அதன் பிறகான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,’  என கூறியுள்ளார்.  முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் கூறுகையில், “ஆயிரம் பேருந்துகளுக்காக காங்கிரஸ் வழங்கிய பதிவு எண்களில்  மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களின்  பதிவு எண்களும் உள்ளன,” என்றார்.

Tags : government ,UPA ,implementation ,Congress , Outstation workers, Congress, special buses, UP government
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...