×

மாணவர்கள், பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு: ஜூன் 1ம் தேதிக்கு பதில், 15ம் தேதி துவங்கும்

* எடப்பாடியுடன் ஆலோசனைக்கு பின் செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை: மாணவர்கள், பெற்றோர் கோரிக்கையை ஏற்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் அறிவித்தார். இதை தொடர்ந்து, தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசுத் தேர்வுகள் துறை செய்து வந்தது. மேலும், இந்த தேர்வு நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், பெற்றோர் தரப்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நேரத்தில் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு ெதவித்தன. பாதிப்பு குறைந்த பின்னர் தேர்வை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இருந்தபோதிலும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், போக்குவரத்து வசதிகள் செய்து தேர்வுகளை நடத்துவோம் என்று பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் அறிவித்தார். பின்னர் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதற்கு பின்னர் அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் ஒரு தேர்வு அறையில் 10 பேர் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், தேர்வு நடத்துவதற்கு பெற்றோர் தரப்பில் இருந்து முழு சம்மதம் கிடைக்கவில்லை.

மேலும், வைரஸ் தொற்று முற்றிலும் நீங்கிய பிறகு, 15 நாட்கள் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து பின்னர் தேர்வு நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், இதுகுறித்து முடிவு செய்வதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதற்கு பிறகு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: 10ம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வருடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இதன்படி பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்துவதற்கு  முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  தேர்வுகளை சிறப்பாக நடத்த  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

பெற்றோர் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.பிளஸ்-1 தேர்வின்போது விடுபட்ட 3 பாடங்களுக்கான தேர்வுகள் 16ம் தேதியும், பிளஸ் 2 தேர்வில் எழுத முடியாமல் போன மாணவர்களுக்கான தேர்வுகள் 18ம் தேதியும் நடக்கும். கொரோனா அச்சத்தால் வெளியூர் சென்றுள்ள மாணவர்கள் திரும்ப வர இ-பாஸ் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தேர்வு நடக்கும் போது, ஒரு தேர்வு அறையில் 10 பேர் வீதம் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 12,690 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் இன்னும் இரண்டு நாட்களில் முடிக்கப்படும். அதனால் மாணவர்கள், பெற்றோர் அச்சப்பட தேவையில்லை.
இது குறித்து பெற் றோர்கள் கூறியதாவது; அரசு காலம் கடந்து அறிவித்து இருந்தாலும் தேர்வு தள்ளிவைத்ததை வரவேற்கிறோம். அதற்குள் வாகன வசதி  ஏற்படுத்தி தரவேண்டும் என்றனர்.

அமைச்சர்கள் அதிருப்தி
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில், தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சனம் எழாமல் இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன. தற்போது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விமர்சனங்களுக்கு ஒரு சில அமைச்சர்கள்தான் காரணம் என்று பல அமைச்சர்கள் கருதுகின்றனர். இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் 10ம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்டது அரசுக்கு கடுமையான கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது. இது குறித்து அமைச்சரவையிலும் கடும் கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. சிபிஎஸ்இ நிர்வாகமே தேர்வை மாற்றியபோது நாம் மட்டும் ஏன் தேர்வு நடத்த வேண்டும் என்று முதல்வரிடமும் வடக்கு மற்றும் தென் மாவட்ட அமைச்சர்கள் சிலர் இது குறித்து அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் 10ம் வகுப்பு தேர்வு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை
தேர்வுகள் வழக்கம்போல 3 மணி நேரம் நடக்கும். கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும், மாணவர்கள் தங்கள் விவரங்களை விடைத்தாள் முகப்பில் குறிப்பிடவும் மொத்தம் 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது.

தேதி    பாடம்
ஜூன் 15    மொழிப்பாடம்
ஜூன் 17    ஆங்கிலம்
ஜூன் 19    கணக்கு
ஜூன் 20    விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 22    அறிவியல்
ஜூன் 24    சமூக அறிவியல்
ஜூன் 25    தொழில் பாடம்

Tags : Parents ,10th Class General Elections ,10th Class Elections , Students, Parents, Edappadi, Senkottaiyan, Corona, Curfew, Class 10
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்