×

கொரோனா வராமல் இருக்க தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொள்கிறேன்: அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: மலேரியாவிற்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தடுப்பாக தினமும் உட்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேரியாவிற்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம் என கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்பின்னர், அது குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. இதற்கிடையே இந்தியாவில் இருந்து பெருமளவு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா இறக்குமதியும் செய்தது.

ஆனால், இந்த மருந்து குறித்த ஆராய்ச்சியில், உண்மையில் கொரோனாவை முற்றிலும் குணமாக்கும் என்பது இதுவரையில் நிரூபணம் ஆகவில்லை. மேலும், இதை முறையின்றி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என உலக நாடுகளும், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒழுங்காற்று துறையும் எச்சரிக்கை விடுத்தன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு கொரோனாவும், அதன் அறிகுறியும் இல்லை.

ஆனாலும் கடந்த ஒன்றரை வாரமாக தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்கிறேன். இதோடு சேர்த்து ஜின்க் மருந்தையும் உட்கொள்கிறேன். ஏனென்றால், இது நன்மை தரும் என நினைக்கிறேன். இது தொடர்பாக நான் நிறைய நல்ல விஷயங்களை கேட்டு இருக்கிறேன். அமெரிக்காவில் முன்னிலை பணியாளர்கள், டாக்டர்கள் என பலர் இம்மருந்தை பயன்படுத்துகின்றனர். அதனால் நானும் உட்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Trump , Corona, Hydroxy Chloroquine, President Trump
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...