×

ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி செயல்படுத்துவது?: பிரதமர் மோடி தலைமையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்...!

டெல்லி: கொரோனா ஊரடங்கு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘ஊரடங்கால் சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க, ரூ.20 லட்சம் கோடிக்கான நிதிச் சலுகைகள் அறிவிக்கப்படும்,’ என்று தெரிவித்திருந்தார். அதன்படி, அதற்கு மறுநாள் புதன் கிழமையில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு, இந்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ என்ற பெயரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் படிப்படியாக அறிவித்தார். கடைசியாக, 5வது கட்டமாக கடந்த 17-ம் தேதி பிற்பகல் 11 மணிக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதில், பாதுகாப்பு, மின்சாரம், இஸ்ரோ, அணுசக்தி, நிலக்கரி உள்ளிட்ட 8 முக்கிய துறைகளில் தனியார் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துக்கான பொது செலவினங்கள் அதிகரிக்கப்படும். சுகாதார நிறுவனங்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சுகாதார மற்றும் நல மையங்களை ஏற்படுத்துவது, அனைத்து மாவட்டங்களிலும் தொற்றுநோய் மருத்துவமனை வளாகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்கள், வட்டார அளவில் ஒருங்கிணைந்த சுகாதார மையங்கள் ஏற்படுத்துதல், ஆய்வுகளை ஊக்குவித்தல் போன்றவை மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிலையில், டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப் பணி குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ளதாகவும், ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது பற்றி அமைச்சரவையில் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில் ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Tags : Narendra Modi , Prime Minister Narendra Modi to meet tomorrow
× RELATED சொல்லிட்டாங்க...