சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்தில் உள்ளது. இருப்பினும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள், தளர்வுகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி எஸ்.எம். நகரில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சி ஆணையம் பிரகாஷ், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா பரவல் தடுப்பு பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது. கொரோனா பாதிப்பை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றார். யாருடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடாது என்று தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. மிகக் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழக அரசு முனைப்புடன் எடுத்து வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை பரிசோதனை, தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். சென்னையில் நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 50 இடங்களில் வாகனங்களில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஐசிஎம்ஆர் குழு ஆய்வு நடத்தி உள்ளது என்றும் தெரிவித்தார்.