×

சேரன்மகாதேவி, தூத்துக்குடி பகுதியில் சூறைக்காற்றில் ரூ.50 லட்சம் வாழைகள் சேதம்

வீரவநல்லூர்: சேரன்மகாதேவி, தூத்துக்குடி பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் ரூ.50 லட்சம் மதிப்பிலான வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளான பிள்ளைகுளம், உலகன்குளம், ஓடைக்கரை, சடையபுரம், வெங்கடரங்கபுரம் மற்றும் சடையமான்குளம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது. ஏத்தன், செவ்வாழை, கோழிக்கூடு, நாடு உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ளது. கிணற்று பாசனம் மற்றும் ஆழ்துளை மூலம் பெரும் பொருட்செலவில் வாழைகளை விவசாயிகள் வளர்த்தனர். செவ்வாழை ஒரு வாழைக்கு சுமார் ரூ.250 வரை செலவிடப்பட்டுள்ளது. குலை தள்ளி அரை விளைச்சல் வரை இப்பகுதியில் வாழைகள் வளர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வீசிய திடீர் சூறைக்காற்றில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து சேதமடைந்துள்ளது.

இதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும். இதுகுறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி தாசில்தார் கனகராஜ் சம்பவ இடத்திற்கு சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். ஏற்கனவே கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இந்த திடீர் சூறைக்காற்று இடியாக அவர்களது வாழ்வில் விழுந்துள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாகும்.

ஸ்பிக் நகர்:  தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி, குலையன்கரிசல், பொட்டல்காடு, கோரம்பள்ளம், அய்யனடைப்பு, வீரநாயக்கந்தட்டு, சாயர்புரம் உள்ளிட்ட பகுதியில் இந்த ஆண்டு ஓரளவு மழை பெய்து தண்ணீர் வந்ததால் விவசாயிகள் வாழை உளுந்து, நெல் உள்ளிட்டவை பயிரிட்டனர். ஏற்கனவே நெல் அறுவடை முடிந்துவிட்டது. உளுந்து பயிர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளானதால் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. செடிகள் நீண்டு வளர்ந்தும் காய்பிடிக்கவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாழைத்தார்கள் வெட்டும் பணி துவங்கிய நிலையில், நேற்று முதல் காற்றின் வேகம் வழக்கத்திற்கு மாறாக வேகமாக வீசி வருகிறது. காற்றின் வேகத்தில் வாழைகள் கீழே சரிந்து விழுந்து விடாமல் இருப்பதற்காக வாழையின் அருகில் கம்புகளை வைத்து விவசாயிகள் முட்டு கொடுத்துள்ளனர். இருப்பினும் நேற்று வீசிய சூறைக்காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் குலைதள்ளிய ஆயிரக்கணக்கான வாழைகள் கீழே சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.



Tags : Thoothukudi ,hurricane ,Cheranmagadevi ,area , 50 lakh bananas,damaged , hurricane,Cheranmagadevi, Thoothukudi
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...