×

கொரோனா ஊரடங்கு தடையால் கும்பகோணத்தில் பல கோடி பித்தளை, சில்வர் பாத்திரங்கள் தேக்கம்

*  வாழ்வாதாரத்தை தொலைத்த 10ஆயிரம் தொழிலாளர்கள்
*  கந்துவட்டிக்கு கடன் வாங்கி குடும்பம் நடத்தும் அவலம்
*  கடனிலிருந்து மீண்டு வர ஓராண்டாகும்

கும்பகோணம்: கொரோனா ஊரடங்கு தடையால் கும்பகோணத்தில் பலகோடி பித்தளை, சில்வர் பாத்திரங்கள் முடங்கியுள்ளன. வாழ்வாதாரத்தை தொலைத்த 10ஆயிரம் தொழிலாளர்கள் கந்துவட்டிக்கு கடன் வாங்கி குடும்பம் நடத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோயில் நகரம் என்று பெயர் பெற்றது. அதுமட்டுமில்லாமல் பட்டுசேலை, வெற்றிலை நெய்சீவல், ஈயப்பாத்திரம் உள்ளிட்ட சிறப்புகள் இருந்தாலும் வீட்டுக்கு தேவையான சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்கள் உலக புகழ்பெற்றவையாகும்.கும்பகோணம் பகுதியிலுள்ள கோயிலுக்கு வருபவர்கள், சுவாமி தரிசனம் செய்து விட்டு கும்பகோணம் கடைத்தெருவிற்கு சென்று ஈயப்பாத்திரங்கள், உணவு தயாரிப்பதற்கான பாத்திரங்கள் மற்றும் பிரதானமான பித்தளை மற்றும் சில்வரினாலான பூஜைபொருட்கள் வாங்காமல் கும்பகோணத்தை விட்டு நகரமாட்டார்கள் என்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரியமான ஒன்றாகும்.தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலுார், பெரம்பலுார், காரைக்கால், கடலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து திருமணத்திற்கு தேவையான சிறிய பாலைடையிலிருந்து பெரிய அண்டா வரை கும்பகோணத்திற்கு வந்து வாங்கி செல்வார்கள். அதற்காக காலையிலேயே வாகனத்தில் குடும்பத்துடன் வந்து, உணவையும், டிகிரிகாப்பியையும் குடித்து விட்டு, திருமணத்திற்கு சீதனமாக வழங்க வேண்டிய பொருட்களை பொறுமையாக வாங்கி கொண்டு செல்வார்கள்.

இத்தகைய சிறப்பு பெற்ற கும்பகோணத்தில் 500 பித்தளை சில்வர் பட்டறைகள், 10ஆயிரம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் உள்ள தொழிலாளர்கள், 300 பாத்திர விற்பனை கடைகள் உள்ளன. இதுபோன்று பாத்திரங்களுக்கு என இத்தனை பட்டறைகள், கடைகள் மற்றும் தொழிலாளர்கள் எந்த ஊரிலும் கிடையாது. இந்நிலையில் கும்பகோணத்தின் பிரதானமான பித்தளை மற்றும் சில்வர் பாத்திரம் தொழில் கொரோனா ஊரடங்கு தடையால் 55 நாட்களுக்கு மேலாக முடங்கியுள்ளது. பாத்திர தொழிலாளர்கள் அனைவரும் தினக்கூலியாக தினந்தோறும் ரூ.500 முதல் ரூ. 750 வரை பெறுவார்கள். அதனை கொண்டு வீட்டு வாடகை, மருத்துவம் , உணவு செலவு போக மீதம் இருப்பது சொற்ப காசுகள் தான். இதனால் பாத்திர தொழிலாளர்கள், தினந்தோறும் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு சில நாட்களில் ஊரடங்கை தளர்த்தி விடுவார்கள் என்று இருந்த நிலையில் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாத்திர உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் என அனைவரும் போதுமான வருமானமின்றி உள்ளனர்.

கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதுார் பகுதிகளில் 500 பட்டறைகளில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்கள் தேங்கி கிடக்கின்றன.விற்பனை செய்யும் கடைகளும் திறக்காததால் தினந்தோறும் ரூ.1கோடி என இதுநாள் வரை பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 10ஆயிரம் தொழிலாளர்கள் எந்தவித வருமானமுமில்லாமல் மற்றவர்களிடம் கந்துவட்டியாகவும், கடனாக பணத்தை வாங்கி குடும்பத்தினருக்கு செலவு செய்து வருகிறார்கள்.
ஊரடங்கு தடையை கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தினாலும் பாத்திர தொழிலாளர்கள், மீண்டு வர ஒரு வருடத்திற்கு மேலாகும். பாத்திரம் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்களுக்கு வட்டியில்லா கடனுதவி, மானிய விலையில் மூலப்பொருட்கள், மின்சார கட்டணம், சொத்து வரி, விற்பனை வரி உள்ளிட்ட அனைத்தையும் தமிழக அரசு தள்ளுபடி செய்து தர வேண்டும் என பாத்திர உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பாத்திர தொழிலாளர் மணி கூறுகையில், கும்பகோணத்தில் 150 ஆண்டுகளாக பித்தளை, சில்வர் பாத்திரங்கள் செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பாத்திரங்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல்வேறு பகுதிகளில் பாத்திரங்கள் தயார் செய்தாலும், கும்பகோணம் பாத்திரம் என்றால் தனிச்சிறப்பு உண்டு. இங்கு தயாரிக்கப்படும் பாத்திரங்கள் சுத்தமாகவும், தரமானதாகவும் இருக்கும். குவளை, தவளை, கூஜா, டம்பளர், சொம்பு, தட்டு, தாம்பாளம் உள்ளிட்ட அனைத்து பாத்திரங்களும் குறிப்பிட்ட அளவில் சாஸ்திர அடிப்படையில் அமைந்திருக்கும். இதே போல் அனைத்து பொருட்களும் விஷேசமாக தனிச்சிறப்புடன் இருப்பதால், பலநுாறு ஆண்டுகளாக பாத்திரம் தொழில் என்றாலே கும்பகோணம் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.ஆனால் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையால் அனைத்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், தொழிலாளர்களும் போதுமான வருமானமின்றி கஷ்டப்படுவதால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி குடும்பத்தை நகர்த்தி வருகின்றோம். மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதியும், நிவாரண பொருட்கள் வழங்கினாலும் பாத்திர தொழிலாளர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் 10ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழியில்லாமல் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால், ஊரடங்கு நாட்களிலிருந்து பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாத்திர தொழிலாளர்கள் ஊரடங்கு நாட்களில் வாங்கிய கடனிலிருந்து மீண்டு வர குறைந்த பட்சம் ஓராண்டு ஆகும் என்றார்.

பிரசித்தி பெற்ற கும்பகோணம் குடம்
வீடுகளில் அதிகமாக புழங்குவது குடமாகும். குடமில்லாத வீடில்லை என்று கூறலாம். இக்குடத்தை முதன் முதலில் தயாரித்தது கும்பகோணத்தில் தான் என்பது சிறப்பாகும். கர்ப்பிணி பெண்கள் வீட்டிலிருந்தால் அதிகமாக வேலை செய்ய மாட்டார்கள். வீட்டிலுள்ள முதியவர்கள், கர்ப்பிணி பெண்களை அழைத்து 5 குடம் தண்ணீர் எடுத்து வந்து தொட்டியில் ஊற்று என்பார்கள். இந்த வேலைகளை செய்தால் சுகப்பிரசவம் நடைபெறும் என்பது இன்றளவும் உள்ளது. இது போன்ற விஷயத்திற்காக தான் கும்பகோணம் தொழிலாளர்கள் குடத்தை தயாரித்துள்ளார்கள் என்பது சிறப்பாகும். மேலும், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வந்து சீதன பொருட்களை பார்த்து விட்டு எங்கே கும்பகோணம் பித்தளை குடம் என்று கேள்வி கேட்கும் அளவிற்கு கும்பகோணம் குடம் பெயர் பெற்றதாகும்.



Tags : Corona ,Kumbakonam ,brass , Corona curfew , multi-billion brass ,silver vessels in Kumbakonam
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்