×

சாத்தான்குளம் பகுதியில் வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள் அதிகரிப்பு: 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

சாத்தான்குளம்: மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்தும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்ட பகுதியில் இருந்தும் சாத்தான்குளம், தட்டார்மடம் பகுதிக்கு  சொந்த ஊருக்கு திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா தொற்று வருமோ என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வெளியூர்களிலிருந்து வந்த 100க்கு மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. தற்போது 4ம் கட்ட ஊரடங்கையொட்டி மக்களுக்கு தளர்வுகளை அறிவித்து வருகின்ற. தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதியில் இருந்து வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் சொந்த ஊருக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் அனுப்பப்பட்டு வருகின்றனர். இதேபோல் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதியில் வியாபாரம் நிமித்தம் காரணமாக தங்கி இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்களும் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். அதன்படி சாத்தான்குளம், தட்டார்மடம், பேய்க்குளம், பெரியதாழை, சொக்கன்குடியிருப்பு, பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு இதுவரை 100க்கும் மேற்பட்டோர்  வந்துள்ளனர்.

இதில் பேய்க்குளம் அருகே உள்ள இளமால்குளத்தில் மும்பையில் இருந்து வந்த தாய், மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நெல்லை கொரோனா சிகிச்சை வார்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் இளமால்குளம், புளியங்குளம் பகுதிக்கு யாரும் செல்ல கூடாது என போலீசார் சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்க தொடங்கியுள்ளனர். மேலும் கொரோனா தொற்று உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த பால்காரர், மளிகை கடைகாரர் மற்றும் அவரது உறவினர்கள் சுகாதாரத்துறை மூலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்பை உள்ளிட்ட வெளிமாநில பகுதிகளில் இருந்து வரும் நபர்கள் சோதனையில் கண்டறியப்பட்டு சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு பரிசோதனை முடிவு வந்ததும் தொற்று இல்லாதபட்சத்தில் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பபடுகின்றனர். தற்போது கல்லூரியில் 70பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் சென்னை கோயம்பேடு, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.   அதன்படி சாத்தான்குளம், தட்டார்மடம் பகுதியில் 150பேர்களுக்கு மேல்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 25பேர்களுக்கு ரத்தமாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. வெளிபகுதியில் இருந்து வருபவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு  பரிசோதனைக்கு  தூத்துக்குடி, நெல்லைக்கு அனுப்பப்படுவதால் அதன் முடிவுகள் வெளி வர தாமதம் ஆவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எந்தவித நோய் அச்சமின்றி சாத்தான்குளம் பகுதியில் உலா வருகின்றனர். இதுகுறித்து  புகார் தெரிவித்தால் தனிமைப்படுத்தவர்களுக்கும், சுகாதாரத்துறையினருக்கு வாக்கு வாதம் ஏற்படும்  நிலை உருவாகிறது. ஆதலால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தாமாகவே வீட்டில் தனித்திருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : expatriates ,Sathankulam , Increase,expatriates , Sathankulam, 100 isolated
× RELATED இன்ஸ்டா படுத்தும்பாடு… குளத்தில்...