×

நன்றாக விளைந்தும் பயனில்லை செலவு செய்த காசு கூட தேறலை..: கண்ணீரில் காய் வாழை விவசாயிகள்

திருக்கனூர்: புதுவை அடுத்த திருக்கனூர் பகுதி முற்றிலும் கிராம பகுதிகைளை உள்ளடக்கியது. இங்குள்ள பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியுள்ளனர். இந்நிலையில் திருக்கனூர் அடுத்த சந்தை புதுக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அதிகளவில் காய் வாழை பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நம்பி கரும்பு பயிரிட்டவர்கள் எல்லாம், ஆலை இயங்காத காரணத்தால் மாற்றுப்பயிராக இந்த காய் வாழையை பயிரிட்டு வருகின்றனர். இந்த வாழையில் காய்கள் பெரிதாக இருக்கும். பழமாகாது. இதனால் பஜ்ஜி போடுவதற்கு, சமையலில் பயன்படுத்துவதற்கு இந்த வாழையை விரும்பி வாங்குகிறார்கள். மேலும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும், துக்க நிகழ்ச்சிகளுக்கும் பந்தலில் காய் வாழை மரத்தையே கட்டி வைக்கும் வழக்கம் உள்ளது.

வழக்கமாக ஏப்ரல், மே மாதம் கோடை விடுமுறை என்பதால் பொது இடங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிகளவில் கூட்டம் வரும். இதனால் பஜ்ஜி வியாபாரம் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாக இந்த சீசனில் காய் வாழைக்கு மிகுந்த கிராக்கி வரும். இதை நம்பி திருக்கனூர் பகுதியில் 50 ஏக்கர் முதல் 100 ஏக்கர் வரை காய் வாழை பயிரிடப்பட்டிருக்கிறது. அவை நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தும் விவசாயிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. கொரோனா எதிரொலியாக நாடே முடங்கியிருப்பதால் காய் வாழை பயிரிட்டவர்கள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

வழக்கமாக திருக்கனூர் பகுதியில் பயிரிடப்படும் காய் வாழையை வாங்கி செல்ல சென்னை கோயம்பேடு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் நேரில் வருவார்கள். தற்போதைய சூழலால் அவர்கள் யாரும் வருவதில்லை. விவசாயிகளே அறவடை செய்து அனுப்பி வைக்கலாம் என்றால் போக்குவரத்து வசதியில்லை. இதனால் ரூ.300க்கு விற்ற ஒரு தார் வாழைக்காய் தற்போது ரூ.100 என விற்கப்படுகிறது. அதுகூட சரியாக விற்காமல் காய்கள் வீணாகிறது. ஒரு ஏக்கருக்கு வழக்கமாக ஆயிரம் தார் கிடைக்கும். இதன் மூலம் முன்பு 3 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் செலவு ரூ.1 லட்சம் போக ரூ.2 லட்சம் லாபம் கிடைக்கும். தற்போது செலவு செய்த தொகை கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Tags : tai banana farmers , Well worth , money, even the money spent
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...