×

அனுமதியின்றி தண்ணீர் பயன்பாடு வரி வசூலிப்பில் கொம்யூன் பஞ்சாயத்துகள் கெடுபிடி

புதுச்சேரி: புதுச்சேரி கிராமப்புற பகுதிகளில் வீடுகளில் மீட்டர் பொருத்தாமல்  தண்ணீரை பயன்படுத்துவோரின் விபரங்களை கணக்கெடுக்கும் பணியில் கொம்யூன்  பஞ்சாயத்துக்கள் தீவிரமாக இறங்கி வரிகளை வசூலிப்பதில் கெடுபிடி காட்டி  வருகின்றன.  புதுச்சேரியில் நகர பகுதியை தவிா்த்து வளர்ந்து வரும்  பகுதிகளான வில்லியனூர், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கூடப்பாக்கம், மடுகரை  உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு கடந்த 5  ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிபெயர்ந்துள்ள நிலையில்,  ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் பொதுப்பணித்துறை தண்ணீர் இணைப்புகளை  பயன்படுத்தி வருகின்றனர்.  இருப்பினும் இவர்களுக்கான குடிநீர்  பயன்பாடுகளை கண்டறியும் வகையில் மீட்டர்கள் பொருத்தப்படாமல் இருந்தன.  தற்போது அரசு விநியோகிக்கும் தண்ணீரை தேவையில்லாமல் பலர் விரயம் செய்வதாக  பொதுப்பணித்துறையின் நீர்ப்பாசன கோட்டத்துக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து  அவர்களது வழிகாட்டுதலின்பேரில் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்கள்  ஒவ்வொருவரின் வீடுகளிலும் திடீரென கணக்கெடுப்பு பணியில் இறங்கியுள்ளது.  அரசு விநியோகிக்கும் தண்ணீரை மீட்டர் பொருத்தாமல் பயன்படுத்துேவாரின்  விபரங்களை சேகரித்து அவர்களுக்கு விண்ணப்பங்களை தானாகவே ஊழியர்களும்  விநியோகித்து வருகின்றன. அதில் நுகர்வோரின் பெயர், வீட்டு முகவரி,  வீட்டுவரி, ஆதார், ரேசன் கார்டு உள்ளிட்ட தகவல்களை கேட்கப்பட்டுள்ளன.  இதனால் விரைவில் இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் ஆய்வுக்குட்படுத்தி குடிநீர்  இணைப்பு கட்டண நிலுவை மட்டுமின்றி வீட்டுவரி தொகையையும் வசூலிக்கும்  நடவடிக்கையில் சுறுசுறுப்புடன் இறங்கியுள்ளது. இதற்காக ரூ.1,000 வரை  அபராதமும் வசூலித்து வருகிறது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வருமானத்தை,  வேலையிழந்து வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் அரசின் இந்த நடவடிக்கையால்  அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


Tags : Commune , Commune panchayats, collecting water , tax without permission
× RELATED திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூ.வை...