×

வைரஸ் தொற்று வைரலாக பரவும் சமயத்தில் மன பயத்துடன் எப்படி பொதுத்தேர்வு எழுதுவது?

* 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அச்சம்
* தள்ளி வைக்க பெற்றோரும் வலியுறுத்தல்

மதுரை: தமிழகத்தில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நல்ல மனநிலையில் பொதுத்தேர்வை எழுத முடியாது. எனவே, தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டுமென 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், நாளுக்கு நாள் பாதிப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் முதல் வாரத்தில் இருந்தே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், ஒரு தேர்வுக்கு மட்டும் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. பிளஸ் 1 வகுப்பு ஒரு தேர்வு மட்டும் நடைபெற வேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, தேதி குறிப்பிடப்படாமலே இருந்து வந்தது. கடந்த 12ம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். மார்ச் 26ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 கடைசி தேர்வு ஜூன் 2ம் தேதி நடைபெறும். அதேபோல், பிளஸ் 2 தேர்வை மார்ச் 24ம் தேதி எழுதாத மாணவர்கள் ஜூன் 4ம் தேதி எழுதலாம் என தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளையும் அரசு முடுக்கி விட்டு வருகிறது.

அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2 வாரங்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்காக முகாம் அமைத்து பரிசோதிக்கப்பட்டனர். தற்போது வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களால் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படி மாணவர்கள் நல்ல மனநிலையில் எழுத முடியுமென மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறும்போது, ‘‘கொரோனா தொற்று முழுவேகத்தில் இல்லாமல் இருந்தபோது கூட நாங்கள் தேர்வு எழுதி இருப்போம். இப்போது வேகமாக பரவி வரும்போது பயத்துடனே தேர்வு எழுதும் நிலை ஏற்படும். இதனால் நன்றாக படிப்பவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெற முடியாது. வினாத்தாள், உட்காரும் இடம், வகுப்பறையில் கிருமித்தொற்று இருக்குமோ என்று அச்சம் ஏற்படும். தேர்வு தேதி அறிவித்த நாளில் இருந்து மனக்குழப்பம், மனபயம் ஏற்படுகிறது. எனவே, தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும்’’ என்றனர்.

ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘ஊரடங்குக்கு முன்பு நகர் பகுதிகள், கிராமப்புறங்களில் இருந்து பஸ்கள், ஷேர் ஆட்டோக்களில் ஏராளமான மாணவர்கள் பள்ளிக்கு சென்று படிக்கின்றனர். ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்தும் இயக்கப்படவில்லை. இந்த சூழலில், வெளியூர்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் எப்படி தேர்வு எழுத முடியும்? அரசு ஊழியர்களுக்கே உரிய முறையில் போக்குவரத்து வசதிகளை அரசால் செய்து தர முடியவில்லை. ரெகுலர் வகுப்புகள் முடிந்து தேர்வுக்கான விடுமுறை நாட்களில் படித்து விட்டு தேர்வு எழுதுவது வேறு. கொரோனா வைரஸ் தொற்றால் வீட்டில் இருந்து விட்டு, தற்போது வேகமாக பரவும் சூழலில் தேர்வு எழுத வருவது வேறு. சமூக இடைவெளி விடப்படும். கிருமிநாசினி அடிக்கப்படும் என்று கூறினாலும், மனதளவில் மாணவர்கள் அச்சத்துடனே தேர்வு எழுதுவர். இதனால் நன்றாக படிப்பவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெற முடியாது. எனவே, அரசு தேர்வுக்கு முன்னுரிமை தருவதை விட, மாணவர்களின் மனநலனை முக்கியமாக கருத வேண்டும்’’ என்றனர்.

Tags : election ,General Election , general election,fear,virus is spreading ,virus
× RELATED நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன்...