×

போலி ஏஜென்ட்களை நம்பி வேலைக்கு சென்று ஐக்கிய அரபு நாடுகளில் தவித்த இந்தியர்கள் மீட்பு: தனி விமானத்தில் சென்னை வருகை

சென்னை: துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்து ஏஜென்ட்களை நம்பி போலி பாஸ்போர்ட்டில் சென்றவர்கள், சுற்றுலா பயணிகள் விசாவில் சென்று, வேலைக்கு சேர்ந்து சட்ட விரோதமாக தங்கியவர்கள், பாஸ்போர்ட்டை தொலைத்தவர்கள் என்று பல தரப்பினர் உள்ளனர்.  
ஐக்கிய அரபு அரசு சமீபகாலமாக இதேபோல் சட்ட விரோதமாக தங்கள் நாடுகளில் தங்கி இருப்பவர்களை பிடித்து காவலில் வைத்துள்ளது. இதில் இந்தியர்கள் சுமார் 1000 பேர் வரை இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பீதியால் ஊரடங்கு  அமலில் இருப்பதால் இவர்களை இந்தியாவிற்கு அழைத்துவர இந்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, ஐக்கிய அரபு அரசுடன் இந்திய அரசு பேசி அங்குள்ள இந்தியர்களை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி கோரியது. ஐக்கிய அரபு அரசும் அதை ஏற்றுக் கொண்டு முதற்கட்டமாக சுமார் 400 இந்தியர்களை தங்களுடைய இரண்டு விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதாக கூறியது. இவர்கள் அனைவருக்குமே முறையான பாஸ்போர்ட் இல்லாததால் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக ஐக்கிய அரபு நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இவர்கள் அனைவருக்கும் எமர்ஜென்ஸி சர்ட்டிபிகேட் வழங்கினர். அதன்படி துபாயில் இருந்து பிளை துபாய் ஏர்லைன்ஸ் மூலம் 5 பெண்கள் உட்பட 178 இந்தியர்கள் நேற்று அதிகாலை 2.20 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இருந்தாலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக இருந்தனர்.  இவர்கள் ஐக்கிய அரபு நாடுகளின் குற்றப் பின்னணியில் காவலில் இருந்து விடுவிக்கப்படுபவர்கள் என்பதால் இவர்களை பலத்த பாதுகாப்புடன், தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தி, 5 ராணுவ பஸ்களில் ஏற்றி தாம்பரம் இந்திய விமானப்படை பயிற்சி நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளனர். இதேபோல், இரண்டாவது விமானம் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை வருகிறது. அதில், சுமார் 200 இந்தியர்கள் வர உள்ளனர்.


Tags : Indians ,Rescuers ,UAE ,agents , Fake agents, Indians, solo aircraft, Chennai
× RELATED வெளிநாடுகளில் தவித்த 487 இந்தியர்கள் மீட்பு