×

முதன்முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் குணமடைந்து மீண்டும் பணியில் சேர்ந்தார்: கமிஷனர் வாழ்த்து

தண்டையார்பேட்டை: சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த அருணாச்சலம் என்பவர், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த மாதம் அதிகாரிகள் ஆலோசனைப்படி ரத்த பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  உடனடியாக அவரை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, 14 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இதையடுத்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அவர், பூரண குணமடைந்து நேற்று பணியில் சேர்ந்தார். சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, உதவி ஆய்வாளர் அருணாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவர்கள் சிறந்த முறையில் எனக்கு சிகிச்சை அளித்தனர். உயர் அதிகாரிகள் முதல் சக காவலர்கள் வரை அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்து, நம்பிக்கை அளித்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னர் குடும்பத்தினர் நன்றாக கவனித்து கொண்டனர். 14 நாள் சிகிச்சை மற்றும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, 3 முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகடிவ் வந்ததால், தற்போது மீண்டும் பணியில் சேர்ந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், ‘‘சென்னையில் முதல் முதலாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையால் குணமடைந்து மீண்டும் பணியில் சேரும் உதவி ஆய்வாளருக்கு காவல் துறை சார்பில் பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். தற்போது வரை 190 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.



Tags : Coroner ,assistant inspector ,commissioner ,Corona ,Assistant Coroner , Corona, Assistant Inspector, healed, and congratulated the Commissioner
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது