புளியந்தோப்பு, கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் கொரோனாவுக்கு 4 மூதாட்டிகள் பலி: அச்சத்தில் பொதுமக்கள்

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களில் 2 பேர் நேற்று உயிரிழந்தனர். புளியந்தோப்பு திருவிக நகர் 3வது தெருவை சேர்ந்த 60 வயது மூதாட்டி, காய்ச்சல் காரணமாக கடந்த 13ம் தேதி புளியந்தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, கடந்த 15ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

மற்றொரு சம்பவம்:  புளியந்தோப்பு வஉசி நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு கடந்த 14ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 இதையடுத்து  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அவர் உயிரிழந்தார். ஒரே நாளில் புளியந்தோப்பு பகுதியில் கொரோனா தொற்றால்  2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாநகர்:  கோயம்பேடு அடுத்த  நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 68 வயது மூதாட்டிக்கு நேற்று முன்தினம் இரவு  காய்ச்சலுடன், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, மூதாட்டியை பரிசோதித்த டாக்டர்கள்,  அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  

அங்கு  மூதாட்டிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா தொற்று இருப்பது  உறுதியானது. இதைத்தொடர்ந்து, போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள்,  அவரது உடலை பலத்த பாதுகாப்புடன் சின்ன போரூரில் உள்ள மின் மயானத்தில் தகனம்  செய்தனர்.

தண்டையார்பேட்டை: ராயபுரம்  மண்டலத்துக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவை சேர்ந்த 70  வயது மூதாட்டி, கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்ததால்  காலில் அடிபட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.  நேற்று  முன்தினம் மூதாட்டிக்கு உடல்நிலை மோசமானதால், ஸ்டான்லி அரசு மருத்துமனையில்  சேர்த்தனர். அங்கு, இவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு, தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்தார்.

இதனிடையே, பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று  இருப்பது தெரிந்தது. இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள்  வண்ணாரப்பேட்டை மயானத்தில் மூதாட்டி உடலை அடக்கம் செய்தனர்.

7 போலீஸ்காரர்களுக்கு கொரோனா: கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி, குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புழல்: புழல் கன்னடபாளையம் பாரதியார் தெருவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி, புழல் வெஜிடேரியன் நகரை சேர்ந்த 29 வயது பெண், அவரின் 51 வயது மாமியார், புழல் கதிர்வேடு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த 50 வயது நபர், கதிர்வேடு வீரராகவலு நகரை சேர்ந்த மருந்து விற்பனையாளர் 53 வயது நபர், அவரது 42 வயது மனைவி,  புத்தகரம் விக்கினேஸ்வரன் நகர் காந்தி தெருவை சேர்ந்த கர்ப்பிணி, அவரது 38 வயது கணவர், புத்தகரம் சுபாஷ் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி ஆகியோருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில், தம்பதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மற்ற 6 பேர் தண்டையார்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாம்பரம்:  செம்பாக்கம் ராம் நகர் அண்ணா தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் கோயம்பேடு சென்று வந்தபோது மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் விபத்தில் சிக்கி, சிகிச்சைக்காக குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு சோதனை நடத்தியபோது, அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல், கிழக்கு தாம்பரம் மணிமேகலை தெருவில் ஒரு பெண், குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் 4வது பிரதான சாலையை சேர்ந்த 61 வயது நபர், குரோம்பேட்டை ராதா நகரை சேர்ந்த 29 வயது பெண், மாடம்பாக்கம் பெரியார் நகரில் ஒருவர், ஜோதி நகர் 5வது தெருவில் ஒருவர், பீர்க்கன்காரணை, புதுபெருங்களத்தூர், ஏரிக்கரை தெருவில் ஒருவர் என மொத்தம் 7 பேருக்கு நேற்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

உளவுப்பிரிவு டிஎஸ்பி உட்பட 15 காவலர்களுக்கு தொற்று

தமிழக டிஜிபி அலுவலக உளவுப்பிரிவில் பணியாற்றும்  டிஎஸ்பி மற்றும் தலைமை காவலர், கொத்தவால்சாவடி நுண்ணறிவு பிரிவு காவலர், சைதாப்பேட்டை  ஆயுதப்படை காவலர், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் என மொத்தம் ெசன்னை மாநகர காவல் துறையில் ேநற்று ஒரே நாளில் 15  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநில உளவுப்பிரிவு டிஎஸ்பிக்கு 2 நாட்களுக்கு முன்பு தான் கோவைக்கு பணியிடம் மாற்றம் ெசய்யப்பட்டார். இங்கிருந்து நேற்று விடுபட்டு கோவை செல்ல இருந்த நிலையில் அவருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட டிஎஸ்பி உட்பட 15 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் துறை நேற்று வரை கூடுதல் கமிஷனர் உட்பட மொத்தம் 213 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில்2 வியாபாரிகளுக்கு கொரோனா

சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் கடை நடந்தி வந்த 2 வியாபாரிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்ததால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் கடை நடத்தி வந்த 150க்கும் மேற்ப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்த மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கியவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரையும் கண்டறியும் பணிநடைபெற்று வருகிறது. மேலும், மார்க்கெட் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>