×

மத வழிபாட்டு தலங்களை திறக்க கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து வழிபாட்டு தலங்களை திறக்க கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, நான்காவது முறையாக மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.அதன்படி, சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்டவை பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களை திறக்க அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திருமங்கலத்தை சேர்ந்த ஜலீல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், மத வழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டம் அதிக அளவில் வரும், அவற்றை கட்டுப்படுத்த முடியாது.

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்,  பாதுகாப்பு அளிக்க போதுமான காவலர்கள் இல்லை. மத்திய அரசு மத வழிபாட்டுக்குரிய திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.



Tags : opening ,places ,Icort ,High Court , Places of worship, the case is dismissed, High Court
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்