×

தனிநபர் விளையாட்டு, உடற்பயிற்சி மையம் முடக்கம் சிக்ஸ்பேக் கட்டுக்கோப்பு போச்சு... சாப்ட்டு சாப்ட்டு தொப்பை வந்தாச்சு..

* சமூக இடைவெளியுடன் அனுமதிக்க வேண்டும்
* விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் டேவிட் பேட்டி
* ஒருவரையொருவர் தொடாமல் விளையாடக்கூடிய விளையாட்டான டென்னிஸ், பேட்மின்டன் மற்றும் நடைபயிற்சி போன்றவற்றையும் ஏசி இல்லாத உடற்பயிற்சி கூடங்களில் அதிக கூட்டம் இல்லாமலும் அனுமதிக்க வேண்டும்

சென்னை: சமூக இடைவெளியுடன் தனிநபர் விளையாட்டு, நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மையங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் டேவிட் கோரிக்கை விடுத்துள்ளார். நோய் இல்லாமல் நலமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோன்று, இளைஞர்களும் தினமும் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளனர். மேலும் இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் நோய்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வதை தவிர வேறு எந்த மாற்று வழியும் குறுக்கு வழியும் இல்லை என்று பலவிதமான ஆராய்ச்சி முடிவுகளும் கூறுகின்றன.

உடற்பயிற்சி செய்ய விலையுயர்ந்த கருவிகளோ, உடற்பயிற்சி மையங்களோ தேவையில்லை. எளிய பயிற்சிகள் எத்தனையோ உள்ளது. நீங்கள் முழுமனதுடன் ஈடுபடுவது ஒன்றுதான் தேவை. இந்நிலையில் சுறுசுறுப்பாக நடத்தல், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், நடனப் பயிற்சிகள் நுரையீரல் மற்றும் இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. மேலும் வயதாவதால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க தசைகளுக்கும் எலும்புகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். பளு தூக்குதல், பயிற்சி கருவிகள் பயன்படுத்துதல் இதற்கு உதவும்.  தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் கை, கால் தசைகளை மெதுவாக நீட்டி மடக்கி பயிற்சி செய்வது நல்லது. மேலும் மூச்சை ஆழமாக இழுத்தும் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.

வழக்கமாக உடற்பயிற்சி செய்பவர்கள் கொரோனா காரணமாக 54 நாட்களும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வயதான காலத்தில் சர்க்கரை நோய் பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே அவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் தினமும் நடைபயிற்சி செய்தால்தான் சர்க்கரைநோய், ரத்த ெகாதிப்பு போன்ற நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டிருப்பதால் நடைபயிற்சி எதுவும் செய்ய முடியாமல் வீட்டின் மாடியிலும், பால்கனியிலும் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இதேபோன்று உடற்பயிற்சி மையத்திற்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க கூடிய நபர்கள், சிக்ஸ் பேக் வைத்திருப்பவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்காமல் வீட்டில் இருந்து சாப்பிட்டு கொண்டு வயிறு (தொப்பை) அதிகமானதுதான் மிச்சம். இதனால் அவர்கள் உடல் அளவும், மனதளவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கூட்டாக விளையாடும் விளையாட்டுகளை தவிர தனிநபர் விளையாட்டு, நடைபயிற்சி போன்றவை அனுமதி வழங்க வேண்டும் உடற்பயிற்சி செய்பவர்கள், நடைபயிற்சி செய்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் டேவிட் கூறியதாவது: மனிதனுடைய உடலில் வியர்வை வெளியேறினால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அதற்கு விளையாட்டு, நடைபயிற்சி, உடற்பயிற்சி முக்கியமானவை. எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ் வந்ததையடுத்து தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் அனைவரும் உடற்பயிற்சியை நிறுத்தி விட்டனர். இதுவரை சொன்னது கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் ெகாரோனாவோடு சேர்ந்து வாழ பழகிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். எனவே கொரோனாவோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றால் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தான் சேர்ந்து வாழ முடியும். கொரோனாவோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றால் உடற்பயிற்சி மிகவும் முக்கியமாகும். காரணம், வியர்வை வெளியேறுவதன் மூலம் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். எனவே ஒருவரையொருவர் தொடாமல் விளையாடக்கூடிய விளையாட்டான டென்னிஸ், பேட்மின்டன், நடைபயிற்சி போன்றவற்றையும், ஏசி இல்லாத உடற்பயிற்சி கூடங்களில் அதிக கூட்டம் இல்லாமலும் அனுமதி வேண்டும். மேலும் நீச்சல் குளத்திற்கு காய்ச்சல், சளி இருக்கிறவர்கள் யாரும் வரமாட்டார்கள், உடற்திறன் உள்ளவர்கள்தான் நீச்சல் குளத்துக்கு வருவார்கள். நீச்சல் முழு உடலுக்கும் உடற்பயிற்சி செய்வது போன்றது.

எனவே அதற்கும் அனுமதி வழங்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள தினமும் காலை 6 மணிமுதல் 10 மணி வரையும், மாலையில் 6 முதல் இரவு 8 மணி வரையும் அனுமதிக்க வேண்டும். மேலும் நேரத்தை அதிகரிப்பதால் கூட்டம் இல்லாமல் இருக்கும். அதேபோன்று நடைபயிற்சியும் அனுமதிக்க வேண்டும். அதாவது 4 பேர் சேர்ந்து நடக்காமல், தனித்தனியாக நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். எனவே ஆங்காங்கே உள்ள விளையாட்டு பயிற்சி மையம், உடற்பயிற்சி கூடம், நீச்சல்குளம் போன்றவற்றை திறந்து பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Fitness Center , Personal Games, Fitness Center, Corona, Curfew
× RELATED ஆரம்ப சுகாதார மையத்தில் திறந்தவெளி உடற்பயிற்சி மையம் 20ம் தேதி திறப்பு