×

முக நக நட்பது நட்பன்று… முடிவில்லா பயணத்தில் நண்பன் இறுதி வரை கைவிடாத தோழன்...

* நட்பு என்ன செய்யும்? நட்பு எதையும் செய்யும். நட்பு கண்ணாடி போன்றது. நாம் சோகமாக இருந்தால், அதுவும் சோகமாகும். நாம் மகிழ்ச்சியில் திளைத்தால், அதுவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்,.‘‘நான் இருக்கிறேன் நண்பா உனக்காக...’’ என்று தோள்கொடுத்து உதவும் சிறந்த நண்பனை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சாவே வந்தாலும் அவர்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், மடி ெகாடுக்க நண்பன் தயாராக இருப்பான். அதற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம் இந்த செய்தி.
* ஜாதி, மதத்தை கடந்து தனக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று தனது நண்பனின் உயிரைக்காப்பாற்ற முயற்சித்துள்ளார் யாகூப்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாகூப் முகமது, அம்ரித் ராமச்சந்திரன். நண்பர்களான இருவரும் குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரே அறையில் தங்கி வேலை செய்து வந்தனர். யாகூப் நூல் தொழிற்சாலையும், அம்ரித் விசைத்தறி தொழிலாளியாகவும் தினசரி கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் வேலையின்றி அவதிக்குள்ளானார்கள். கையில் இருந்த பணத்தை நாள்தோறும் உணவுக்காக செலவழித்து வந்துள்ளனர். ஊரடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட நிலையில் இருவரும் சொந்த ஊர் சென்று விவசாய தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் பஸ்தி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு செல்வதற்காக லாரி ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த லாரியில் ஏற்கனவே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் இருந்தனர். இந்நிலையில் அம்ரித்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர் பயணத்தின் காரணமாக காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே சென்றது. லாரியில் உடன் இருந்தவர்கள் அம்ரித்துக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்க கூடும் என அச்சமடைந்தனர். அதனால் அவரை இறக்கிவிட்டு விடும்படி லாரி ஓட்டுனரை கட்டாயப்படுத்தி உள்ளனர்.  இதனால் வேறு வழியின்றி லாரி ஓட்டுனர் அம்ரித்தை மத்தியப் பிரதேச மாநிலம், ஷிவ்புரி மாவட்டத்தில் கொலாரா நகர் நெடுஞ்சாலையில் இறங்கிவிடும்படி கட்டாயப்படுத்தினார்.

 காய்ச்சல் காரணமாக நடக்கக்கூட உடலில் தெம்பு இல்லாத நிலையில் அம்ரித் இறங்கியபோது, நண்பனை அத்தகைய சூழலில் தனியேவிட்டு செல்வதற்கு யாகூப்பிற்கு மனது இடம் கொடுக்கவில்லை. எனவே தானும் இறங்குவதாக கூறி இறங்கி விட்டார். பின்னர் அந்த வழியாக சென்றவர்களின் உதவியோடு ஆம்புலன்சுக்கு யாகூப் தகவல் கொடுத்தார்.  அதுவரையில் சாலையில் இருவரும் தஞ்சம் அடைந்தனர். காய்ச்சல் அதிகமாகி கொண்டே சென்ற நிலையில், அம்ரித் தலையை தனது மடியில் வைத்துக்கொண்டு, அவரது முகத்திலும், உடலிலும் அவ்வப்போது தண்ணீர் தெளித்து அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான் யாகூப். அதன்பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் உதவியுடன் ஷிவ்புரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அம்ரித்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அவரது காய்ச்சல் 105 டிகிரியை தொட்டது. சிகிச்சை பலனின்றி அம்ரித் உயிரிழந்தார்.நண்பரின் இறப்பால் யாகூப் வேதனை அடைந்தநிலையில், கொரோனா நோய் தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் அவர் தனிமைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘திறந்த லாரியில் சுமார் 850 கி.மீ. தூரத்துக்கு வெயிலில் பயணம் செய்ததால் உடலில் கடுமையான நீரிழப்பு ஏற்பட்டு, மூளையில் வெப்பத்தாக்குதல் காரணமாக அம்ரித் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தண்ணீர் கிடைக்கக்கூடிய இடத்தில் லாரியை நிறுத்தும்படி கூறியும் லாரி ஓட்டுனர் நிறுத்தவில்லை என கூறப்படுகிறது’’ என்றார்.  

ஜாதி, மதத்தை கடந்து தனக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று தனது நண்பனின் உயிரைக்காப்பாற்ற முயற்சித்துள்ளார் யாகூப்.  புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டால் இதுபோன்ற அப்பாவி தொழிலாளர்களின் உயிரிழப்புக்களை தவிர்க்கலாம். இந்த நண்பர்களின் கதை வரலாற்று பக்கத்தில் இடம்பெறாவிட்டாலும் கூட, செய்தியை படிப்பவர்களின் மனதில் ஆழமாக பதியும் என்பதில் சந்தேகமில்லை.Tags : State of Uttar Pradesh, Yaqoob Mohammed, Amrit Ramachandran
× RELATED இந்தியாவுடன் நட்பு வைப்பதை தடுக்க 13...