×

சொந்த ஊருக்கு வாகன வசதி கோரி வட மாநில தொழிலாளர்கள் சேலத்தில் திடீர் போராட்டம்: கைது செய்ய முயன்றதால் சிதறியடித்து ஓட்டம்

சேலம்: சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு வாகன வசதி செய்து அனுப்ப வலியுறுத்தி திடீரென கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தினர். போலீசார் கைது செய்ய முயன்றதால் அவர்கள் சிதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.  சேலம் 5 ரோடு, சிவதாபுரம், பனங்காடு, ரெட்டியூர், ரெட்டிப்பட்டி பகுதிகளில் தங்கியிருந்து வெள்ளித்தொழில், கட்டுமான தொழிலில் ஈடுபடும் உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று, கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.  அவர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு ரயில் அல்லது பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தினர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கலெக்டர் அலுவலகம் எதிரே பழைய நாட்டாண்மை கழக கட்டிட சாலைக்கு அவர்களை அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் திடீரென தரையில் அமர்ந்து கலைந்து செல்ல மாட்டோம் என போராட்டம் நடத்தினர். இதையடுத்து கூடுதல் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்டனர். இதனால் அவர்கள் சிதறி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் மாறியது. சாலையின் மறுமுனையான ரயில்வே கேட் பகுதியில் சுமார் 100 பேரை போலீசார் மடக்கி பிடித்து வேனில் ஏற்றி அவர்களின் இருப்பிடத்திற்கு கொண்டு சென்று விட்டனர்.

வட மாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்ய முற்பட்டதும், அனைவரும் ஓட்டம் பிடித்தனர். பெண்கள், குழந்தைகளால் ஓட முடியவில்லை. கண்ணீர் விட்டு கதறினர். ‘‘நாங்கள் ஊரடங்கால், தொழில் இன்றி தினசரி சாப்பாட்டிற்கே தவிக்கிறோம். அதனால்,சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள் என கோரிக்கை விடுக்கிறோம். கடந்த 15 நாட்களாக தொடர்ந்து கேட்டு வந்தும், மாவட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றனர். இப்போது, போலீசாரும் எங்களை விரட்டி அடிக்கிறார்கள்,’’ என்று வேதனையோடு கூறினர்.



Tags : Salem ,North Salem ,hometown ,home , Vehicle, North State workers, Salem, protest, arrest
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...