×

நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவதற்காக டிஎஸ்பி முதல் அனைவரும் லஞ்சம் வாங்குகிறார்கள்: சஸ்பெண்டான இன்ஸ்பெக்டர் பரபரப்பு கடிதம்

கெங்கவல்லி: டிஎஸ்பி முதல் அனைவரும் லஞ்சம் வாங்குவதால்தான், நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுகிறார்கள் என்று வீரகனூர் மணல் கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்டான இன்ஸ்பெக்டர் பரபரப்பு கடிதம் எழுதி எஸ்பிக்கு அனுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் வீரகனூர் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ராமஆண்டவர். இவர், மணல் வியாபாரியிடம் பேரம் பேசிய ஆடியோ உரையாடல், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.  இதுபற்றி துறை ரீதியான விசாரணை நடத்தி கடந்த 10ம் தேதி, இன்ஸ்பெக்டர் ராமஆண்டவரை சஸ்பெண்ட் செய்து சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமஆண்டவர் எஸ்பிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  

சேலம் மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் போலீசார், கிளப், லாட்டரி, மணல், மண், ஜல்லி, சந்துக்கடை, சூதாட்டம் ஆகியவற்றில் வசூல் செய்தும், இரவு ரோந்து எஸ்ஐ, பீட் காவலர்கள், வாகனங்களை வழிமறித்தும் பணம் வாங்குவது காலத்துக்கே தெரிந்தது. லத்துவாடியை சேர்ந்தவர், எனக்கு பணம் கொடுத்திருந்தால், போனில் பலமுறை பணம் தருவதாக பேச வேண்டிய அவசியமில்லை. மணல் குண்டாஸ் போட ஒரு வாகனத்தை பிடிக்க முற்பட்டபோது, தனிப்பிரிவு போலீசார் தடுத்து விட்டனர். ஒவ்வொருவருமே கையூட்டின் ஆணி வேராக உள்ளனர்.   என் குடும்பத்தாருக்கு சம்பள பணம் தவிர,வேறு எந்த பணமும் தெரியாது. டிஎஸ்பி முதல் அனைவரும் லஞ்சம் வாங்குவதால்தான், நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுகிறார்கள்.

என் விருப்பப்படி சம்பளம் பெறக்கூடிய அக்கவுண்ட் நம்பர் ஜூன் மாதம் முதல் குளோஸ் செய்து விட்டு போகிறேன். பினாமி பெயரில் எந்த சொத்தும் வாங்காத நிலையில், லஞ்ச அதிகாரிகளை கட்டுப்படுத்தாமல் விட்டு, என்னை புறமுதுகு காட்டி ஓடச்செய்யும் இந்த அவலநிலையை கண்டு மனம் குமுறி வெளியேறுகிறேன். எனக்கு பென்சன் தொகை, பிடித்தமான தொகை எதுவும் வேண்டவே வேண்டாம். லாட்டரி, சூது, மது, பெட்டிஷன், மணல் போன்றவற்றில் கையூட்டு பெறும் இவர்களை கண்டித்தும், தீர விசாரித்து என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். அத்துடன் லஞ்சமே இல்லாத மாவட்டம் என தெரியவந்தால், என் மீது நடவடிக்கை எடுக்கவும்.

பினாமி பெயரிலும், சம்பளத்திற்கு மீறிய சொத்து இருப்பதாக தெரியவந்தால், என் மீது எந்தவித நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கட்டும். இப்போதும் மணல் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மாவட்டத்தில் யாரேனும் கையூட்டு பெறும் பட்சத்தில், அதற்கு நிர்வாகமே பொறுப்பு. இவ்வாறு தனக்கு வழங்கிய சஸ்பெண்ட் ஆர்டரில், இன்ஸ்பெக்டர் ராமஆண்டவர் உருக்கமாக எழுதி அனுப்பியுள்ளார். இதுகுறித்து மாவட்ட எஸ்பி தீபாகனிக்கரிடம் கேட்டபோது, ‘‘அவர், தேவையில்லாமல் எழுதி கொடுத்துள்ளார். அதனை சரக டிஐஜிக்கு அனுப்பியுள்ளோம். நடவடிக்கை எடுக்க அவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது,’’ என்றார்.

Tags : DSP ,Suspended Inspector DSP ,Inspector , DSP, bribery, suspended inspector, letter
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது