×

மதுரையில் எதிர்ப்பை மீறி திறந்த டாஸ்மாக் மதுக்கடையை பூட்டி பெண்கள் போராட்டம்: தரதரவென இழுத்து சென்று 20 பேர் கைது

மதுரை: மதுரையில் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பூட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தரதரவென இழுத்துச் சென்று 20 பேரை கைது செய்தனர். மதுரை, பொன்னகரம் பிராட்வே தெருவில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 2018ல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் மாற்றப்படவில்லை. கொரோனா ஊரடங்கால் இந்த டாஸ்மாக் கடை ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து நேற்று முன்தினம் முதல் இந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வழக்கம் போல் நேற்று காலை கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கட்சி மாதர் சங்க மாவட்ட தலைவி ராஜேஸ்வரி தலைமையில் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். கடையில் இருந்த விற்பனையாளர்களை வெளியேற்றி விட்டு ஷட்டரை இழுத்து பூட்டி, கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் உதவி கமிஷனர் வேணுகோபால் பேச்சுவார்த்தை நடத்தியும் யாரும் கலைந்து செல்லவில்லை.

இதனைத்தொடர்ந்து கைது செய்வதாக கூறினர். ஆனால் அவர்கள் வேனில் ஏற மறுத்து தரையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர். பின்பு போலீசார் அவர்களை வலுக்கட்டயமாக தரதரவென இழுத்து சென்று வேனில் ஏற்றினர். இதில், 8 பெண்கள் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.  வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நெற்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட வயலாமூர் கிராமத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஊராட்சி தலைவர் எமராஜ் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் முனியன், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று வந்தவாசி- செஞ்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடை மூடப்படும் என்றதும், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.



Tags : pub ,Woman Struggles To Open Task Bar Madurai ,women , Madurai, Tasm bar, women protest, 20 arrested
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...