×

மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கால அவகாசத்துடன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டும்

* தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத மனப்போக்கைக் கைவிட்டு, பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை தொடர்கிற நிலையில், ஐந்தாம் கட்ட ஊரடங்கு குறித்து உறுதியாக எதையும் இப்போது சொல்ல முடியாத சூழலில்,  ஜூன் 1ம் நாள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் என அறிவிக்கும் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் பிடிவாதமான நிலைப்பாடு, மாணவர்கள் மீதான அக்கறையற்ற தன்மையையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை குறித்த குளறுபடிகளும், பரிசோதனை எண்ணிக்கை குறித்த வெளிப்படையற்ற குழப்பமும் நீடிக்கின்ற நிலையிலும், நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்க முடியவில்லை. 11 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; மகாராஷ்ட்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது மாநிலம் தமிழ்நாடு என்ற மோசமான இடத்துக்கு வந்துவிட்டது.   இதில் பச்சிளம் குழந்தைகளும் உண்டு என்கிற பரிதாபத்தில், பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாது என்ற அடிப்படையிலேயே தேர்வுகளை நடத்துவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பதில் அலட்சியம் தெரிகிறது.

பெற்றோரும் மாணவர்களும் பொதுத்தேர்வு வேண்டாம் எனச் சொல்லவில்லை. நோய்த்தொற்றும் ஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் அவசரப்பட்டு நடத்த வேண்டாம் என்பதைத்தான் வலியுறுத்துகிறார்கள். அரசாங்கமோ மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’  வகுப்பு, வெளியூர் சென்ற மாணவர்கள் திரும்பி வர ‘இ-பாஸ்’ என நெருக்கடியை உருவாக்கி,  பெற்றோரையும் மாணவரையும் அச்சுறுத்துகிறது. இதனால் அவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் தாய், தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தை உற்று நோக்கினால் ஒரு தாயின் தவிப்பாகவும் உள்ளக்குமுறலாகவும், பெற்றோரின் அக்கறையாகவும் ஆதங்கமாகவும் உள்ள இந்தக் கடிதத்தின் வரிகள்தான்,  பத்தாம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவ - மாணவியருடைய பெற்றோரின் மனநிலையாக உள்ளது.

அதனைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், ஜூன் 1ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்றும், ஆசிரியர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்துக் கொண்டே இருக்கிறார். தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள் பலரும், ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு, நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வழக்கமான முறையில் வகுப்புகள் நடைபெற்று, அதற்குப்பின் பொதுத்தேர்வு நடத்துவதே மாணவர்களின் மன - உடல்நலனுக்கும் எதிர்கால நலனுக்கும் உகந்தது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதில் ஆரம்பத்திலிருந்தே அலட்சியம் காட்டி வருவதுடன், முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளையும், அறிவியலுக்குப் புறம்பான ஆரூடங்களையும்  தெரிவித்து வருகிறது அதிமுக அரசு. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் காட்டும் அவசரகதியும் அதுபோலத்தான் உள்ளது. மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத மனப்போக்கைக் கைவிட்டு, பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்துமாறு  மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : schools , Students, schools, tenth grade, general exam
× RELATED ஆன்லைன் முறையில் பொறியியல்...