×

நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கியது இயல்பு நிலைக்கு திரும்பும் மாநிலங்கள்: பொது போக்குவரத்து துவக்கம்

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் 4ம் கட்ட ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதில் பல மாநிலங்களிலும் ஓரிரு கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்தை தொடங்கவும், சலூன்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.  கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு விதிக்கப்பட்டு 54 நாட்கள் நாடு முழுவதும் முடக்கப்பட்ட நிலையில், 4ம் கட்ட ஊரடங்கு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறையில், பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க பல தளர்வுகள் வழங்கப்பட்டன. மே 31ம் தேதி வரையிலான 4ம் கட்ட ஊரடங்கு நேற்று தொடங்கியதைத் தொடர்ந்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதன்படி, பல மாநிலங்களிலும் 54 நாட்களுக்குப் பிறகு அனைத்து கடைகளும் வழக்கம்போல் நேற்று திறக்கப்பட்டன. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சலூன், முடிதிருத்தும் கடைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பலரும் முடி வெட்டிக் கொள்ள குவிந்தனர். பெண்கள் அழகு நிலையங்களும் திறக்கப்பட்டன. இதில் சமூக இடைவெளி பின்பற்றுபவது, கிருமிநாசினி தெளிப்பது என பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர். மேற்கு வங்க மாநிலத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை மறுதினம் முதல் ஓட்டல்கள், சலூன்கள், ரெஸ்டாரன்ட்டுகள் மீண்டும் வழக்கம் போல் திறக்க அனுமதிப்பதாக அறிவித்தார். மேலும், மாநிலத்திற்குள் பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்ற அவர், வரும் 27ம் தேதி முதல் ஆட்டோக்கள் 2 பயணிகளுடன் இயங்கவும், நடைபாதை கடைகள் செயல்படவும் அனுமதி வழங்கினார். நோய் பாதிப்பு அடிப்படையில் மண்டலங்களை பிரிப்பது தொடர்பாக மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், ஏ,பி,சி என மண்டலங்கள் பிரிக்கப்படும் என மம்தா அறிவித்தார். கர்நாடகாவில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில், அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா நேற்று அறிவித்தார்.

டெல்லியில் அனைத்து தனியார் அலுவலகங்கள் முழு அளவிலான ஊழியர்களுடன் செயல்படலாம் என அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனாலும் ஊழியர்களை முடிந்தவரை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சலூன்களுக்கு மே 31ம் வரை அங்கு தடை நீடிக்கிறது. இ-ரிக்ஷா, ஆட்டோக்கள் ஒரு பயணிகளுடன் இயங்கவும், பஸ்கள் 20 பயணிகளுடன் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்கள் திறக்கப்பட்டாலும், அதில் கடைகள் ஒற்றை, இரட்டை படை எண்கள் அடிப்படையில் ஒவ்வொரு நாள் மாறி மாறி திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளை முதல் மதுக்கடைகள், பார்கள், சலூன்கள் வழக்கம் போல் செயல்பட அனுமதி தரப்பட்டுள்ளது.

சலூனில் முடி மட்டும் வெட்டிக் கொள்ள முடியும். பார்களில் மது பாட்டில்களை வாங்கிச் செல்ல மட்டும் முடியும். மதுக்கடைகளில் டோக்கன் முறையில் மது விற்பனை நடக்கும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஸ்கள் 24 பயணிகள் மற்றும் 50% கட்டண உயர்வுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  அதிகம் பாதிப்புள்ள மகாராஷ்டிராவில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பகுதிகளை புதிதாக அடையாளம் காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் துணை ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஆந்திராவிலும் மாநிலத்திற்குள்ளான பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அசாமிலும் 100 சதவீத ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கார்கள் 2 பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  

இவ்வாறு அனைத்து மாநிலங்களிலும் நேற்றிலிருந்தும் அடுத்த ஓரிரு தினங்களில் இருந்தும் வழக்கமான பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டிய நிலையில், மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதால், சமூக இடைவெளி பின்பற்றுதல், மாஸ்க் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது கட்டாயமாகி உள்ளது.

வெளி மாநிலத்தவர்களுக்கு தடை
தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் கர்நாடகா மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பாஸ் பெற்று வந்தாலும் அவர்களை எல்லையிலேயே தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


Tags : Phase Curfew ,States: Public Transit Initiative , Curfew, states, public transport, corona, curfew
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...