×

அப்படிப்போடு...புகையிலை புரதத்தில் தடுப்பூசி: சிகரெட் கம்பெனி அசத்தல்

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த புகையிலை நிறுவனம் ஒன்று, புகையிலை புரதம் மூலம் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்துள்ளது. அனுமதி கிடைத்ததும் இதை மனிதர்களிடம் பரிசோதிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் உலகம் விழிபிதுங்கி நிற்கிறது. முதலில் பரவிய சீனா மட்டும் தற்போது இந்த கொரோனாவில் பெரிய அளவில் பாதிப்பின்றி தப்பி பிழைத்துள்ளது. மற்ற அனைத்து உலக நாடுகளும் வைரஸ் பாதிப்பில் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதுடன், உயிரிழப்புகளையும் எதிர்க்கொண்டு வருகிறது. தற்போதுள்ள நிலையில், தடுப்பூசி கண்டுபிடித்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலையில் உலக நாடுகள் உள்ளன.

இதன் காரணமாக அனைத்து நாடுகளும், அனைத்து மருந்து நிறுவனங்களும் கொரோனா தடு்ப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இங்கிலாந்தில் இரண்டு நிறுவனங்கள் மனிதர்களிடம் தடுப்பூசியை செலுத்தி சோதனை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளன. இந்நிலையில், சிகரெட் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் லண்டன் நிறுவனமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம் தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புகையிலை புரதத்தில் இருந்து இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, மருத்துவமனை சோதனைக்கு முந்தையக் கட்டத்தில் உள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதி கிடைத்தால் மனிதர்களிடம் இந்த தடுப்பூசியை செலுத்தி சோதனை மேற்கொள்ளப்படும். வைரசுக்கு எதிராக மருந்து வெற்றிகரமாக செயல்பட்டால் வாரத்திற்கு 10 லட்சம் முதல் 30 லட்சம் தடுப்பூசிகள் வரை தயாரிக்க முடியும்’’ என்று கூறியுள்ளது.

Tags : Cigarette Company, UK, Corona
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...