×

செய்தித்தாள் நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு

சென்னை: ‘கொரோனா’வால் செய்தித்தாள் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்க்க, பிரதமருக்கு, எம்.பி.,க்கள் வாயிலாக அழுத்தம் தருமாறு, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை, செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள் நேற்று சந்தித்து கோரிக்கை விடுத்தனர். ‘கொரோனா’ பரவல் காரணமாக, உலகளவில் அனைத்து செய்தித்தாள்களும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால், இந்திய செய்தித்தாள் நிறுவனங்களுக்கு ஏறத்தாழ, 5000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்தொழிலில் 30 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

செய்தித்தாள் நிறுவனங்களின் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக, செய்தித்தாள்களின் அகில இந்திய அமைப்பான, ‘இந்திய நியூஸ் பேப்பர் சொசைட்டி’ (ஐ.என்.எஸ்) சார்பில், பிரதமர் நரேந்திரமோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை தொடர்பாக பிரதமருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, தமிழகத்திலுள்ள முக்கிய செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள், கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, நிலைமையை எடுத்துரைத்து, அந்தக் கட்சி எம்.பி.,க்கள் கையெழுத்தை, கோரிக்கை மனுவில் பெற்றுத்தர வேண்டுகோள் விடுக்கவுள்ளனர்.

இதன் முதல்கட்டமாக, தமிழக முதல்வர் பழனிசாமியை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில்,‘தினகரன்’ நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்,  ‘தினமலர்’ கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம், ‘தினத்தந்தி’ இயக்குனர் எஸ்.பாலசுப்ரமணிய ஆதித்தன், ‘தி இந்து’ பதிப்பக குழும இயக்குனர் என்.ராம்,
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழும சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் மனோஜ்குமார் சொந்தாலியா, ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

முதல்வரை சந்தித்தபின், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் சந்தித்து மனு அளித்தனர். செய்தித்தாள் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க, தங்களது கட்சி எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெறுவதுடன், பிரதமரிடமும் வலியுறுத்துவதாக தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் உறுதியளித்தனர். இதேபோன்று, அடுத்ததாக, ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து வலியுறுத்த, செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா தடுப்பு பணி விளக்கினார் முதல்வர்
தம்மைச் சந்தித்த செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் உரையாடிய முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘கொரோனா’ பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். உயிரிழப்புகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பிற துறைகள் எவ்வாறெல்லாம் துரிதமாக பணியாற்றுகின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் பரவாமல் இருப்பின், கொரோனா இந்தளவு சென்னையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது என்றும் கூறினார். மேலும் முதல்வர் கூறுகையில், தமிழகத்தில் ஒரே ஆண்டில், 11 மருத்துவக்கல்லுாரிகள் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கி சாதனை புரிந்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

Tags : Newspaper executives ,executives ,CM ,Newspaper , Newspaper Administrators, CM
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!