×

காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் எடப்பாடி அறிக்கை

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு, மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு குறித்து நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.  இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள்  கலந்து கொண்டனர். தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும்,  நீர் இருப்பு 64.85 டிஎம்சி அடியாகவும் உள்ளது.

இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும். இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்றும், மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், 1. டெல்டா பகுதிகளில் 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்க மின்சாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. பொதுப்பணி துறையின் மூலம் ஏ மற்றும் பி பாசன வாய்க்கால்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் சி மற்றும் டி பாசன வாய்க்கால்களும் விரைவாக தூர்வாரப்பட வேண்டும். 3. நெல் ரக விதைகளை தேவையான அளவு விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும்.  4. நெல் சாகுபடிக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், டிராக்டர்கள், சுழற்கலப்பைகள், உழுவை இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். 5. கிணற்று நீர் வசதியுள்ள விவசாயிகள் ஜூன் 12ம் தேதிக்குள் நாற்று விட்டு, நடவுப் பணியினை முடிக்க வேண்டும்.

6. தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, விவசாயிகள், வேளாண் தொழிலாளர்களும் முகக்கவசம் அணிந்து, பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளியினை பின்பற்றி சாகுபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும். போதிய அளவு நீர் இல்லாத சூழ்நிலையிலும், நவீன பாசன முறைகளை கடைபிடித்து, உணவு தானிய உற்பத்தியில் சாதனை அளவை கடந்து மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதினை 5 முறை தமிழ்நாடு பெற்றுள்ளது. தற்போது, உரிய காலத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் சூழல் உள்ளதால், இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் ஒரு புதிய சாதனை அளவை எட்டும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Mettur Dam ,Cauvery Delta , Cauvery Delta, Mettur Dam, Chief Minister Edappadi
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைபு