×

உலகையே அதிரவைக்கும் கொரோனா தொற்றுக்கு காரணம் யார் ?..விசாரணை நடத்த இந்தியா உட்பட 62 நாடுகள் ஆதரவு

ஜெனீவா: கொரோனா தொற்று பரவலுக்கு காரணம் யார்? என்று விசாரணை நடத்தும்படி இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் சார்பில் உலக சுகாதார அமைப்பில் இன்று தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் போன்று, மீண்டும் ஒரு கொள்ளைநோய் பரவுவதை தடுக்க கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று கண்டறிய வேண்டும் என்று ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், இதுதொடர்பாக பாகுபாடின்றி, சுதந்திரமாக, விரிவான விசாரணை நடத்தக் கோரி ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து உலக சுகாதார அமைப்பில் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளன.

இதற்கு இந்தியா, ஜப்பான், பிரிட்டன், பிரேசில், கனடா உள்ளிட்ட 62 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனடிப்படையில், இன்று கூட உள்ள உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக சுதந்திரமான விசாரணை கோரி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த தீர்மானம் எதிர்ப்புகளின்றி விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், சர்வதேச விசாரணையை சீனா அனுமதிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் விசயத்தில் சீனா பல தகவல்களை மூடி மறைத்துவிட்டது என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம்சாட்டி வந்த நிலையில், ஆஸ்திரேலியா இதற்கான சுதந்திரமான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பானது சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அமெரிக்கா, அந்த அமைப்புக்கான நிதியை நிறுத்தியது. மேலும், தங்கள் நாட்டின் மருத்துவ ஆய்வுக் குழுவினை சீனா அனுமதிக்க வேண்டும் என்றும், ஒரு வேளை வேண்டுமென்றே சீனா வைரசை பரப்பியிருந்தால் அவர்கள் அதற்கான விளைவினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : World, Corona, 62 countries, support
× RELATED 102 தொகுதிகளில் முதற்கட்ட...