×

ஊரடங்கில் ஏழைகளுக்காக ரூ.10 ரூபாய்க்கு சாப்பாடு ஓய்வு பெற்ற விஏஓ தாராளம்...காசு இல்லேன்னாலும் இலவசம்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் ஊரடங்கினால் பல்வேறு தரப்பினர் வேலை இழந்து வருவாய் இன்றி தவித்த நிலையில் சேவை உள்ளம் கொண்ட பலர் நலிவுற்ற மக்களுக்கு உணவு வழங்கினர். அரசியல் கட்சியினர், தொண்டு அமைப்பினர் சிலரும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய தொகுப்பு பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், முத்துப்பேட்டையில் ஊரடங்கு நாள் முதல் தொடர்ச்சியாக தினசரி ரூ.10க்கு ஒரு கூட்டு மற்றும் சாதம், சாம்பார் மட்டுமின்றி சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், மல்லி சாதம், புதினா சாதம், கேரட் சாதம், வெஜிடெபிள் சாதம், மாங்காய் சாதம், மிளகு சாதம், தக்காளி சாதம் என ஒவ்வொரு நாளும் வெரைட்டியாக சமைத்து ஓய்வு பெற்ற விஏஓ சௌந்தரராஜன் என்பவர் வழங்கி வருகிறார்.

இதனால் தனமாக பெற விருப்பம் இல்லாத ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருவதுடன் காசு இல்லாதவர்கள் தேடி வந்தால் கூட அவர்களுக்கும் இலவசமாக வழங்கி உதவி வருகிறார். சௌந்தரராஜன் ஓட்டல் ஏதும் வைத்திருக்க வில்லை இவர் தனது மரக்கன்றுகள் விற்பனை செய்யும் கார்டனில் வைத்து இந்த சேவையை செய்து வருகிறார். இதனால் இவரை பலரும் பாராட்டி வருகிறனர். இதுகுறித்து ஓய்வு விஏஓ சௌந்தரராஜன் கூறுகையில், ‘‘சாப்பாடு பொட்டலத்தை இலவசமாக பெற பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இலவசமாக கொடுத்தாலும் அந்த உணவுக்கு இன்றையக்காலகட்டத்தில் மதிப்பு இல்லை. அதனால் சாப்பாட்டுக்கு ₹10 விலை வைத்து விநியோகிக்க ஆரம்பித்தேன் 5 ரூபாய் கொடுத்தாலும் வாங்கி கொள்வோம். காசே இல்லை என்றாலும் கொடுப்பேன், தினசரி மதியம் ஒருவேளை மட்டுமே கொடுத்து வருகிறேன். அதிலும் தினமும் தயார் செய்யப்படும் உணவுகள், நோய் எதிர்ப்பு சக்தியுள்ள மூலிகை பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த சேவை எனக்கு முழு திருப்தியாக உள்ளது. ஊரடங்கு காலம் வரையிலும் இச்சேவையை தொடர தீர்மானித்துள்ளேன்’’ என்றார்.



Tags : VAO ,poor , Curfew, meal, VAO
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!