×

அழகர்கோயில் சித்திரை திருவிழா: செயற்கை வைகையில் இறங்கினார் கள்ளழகர்..!

மதுரை: அழகர்கோயிலில் செயற்கையாக அமைக்கப்பட்ட வைகையாற்றில் இன்று காலை பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். தரிசனத்திற்கு அனுமதி இல்லாததால், அழகர் ஆற்றில் இறங்கிய இந்த நிகழ்ச்சி, இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்று மதுரை மாவட்டம் அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் கோயில். இக்கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு அழகர்கோயிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், தமிழக அரசு கோயில் விழாக்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் நேற்று கோயில் வளாகத்திலேயே கள்ளழகர் எதிர்சேவை நடந்தது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி உட்பட அனைத்து நிகழ்வுகளையும் கோயில் உள் பிரகாரத்தில் ஆகம விதிப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் இன்று நடந்தது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு திருவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காக 100 அடி தூரத்தில் 10 அடி அகலத்தில் செயற்கையாக வைகை ஆறு உருவாக்கப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பைகள் விரித்து, லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட வைகை ஆற்று தண்ணீர் நிரப்பப்பட்டது. ஆடி வீதியில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட செயற்கை வைகை ஆற்றில் இன்று காலை 8.30 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் இறங்கினார். இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருக்கோவில் இணையதளம் மூலம் வீட்டில் இருந்தபடியே பக்தர்கள் சித்திரை திருவிழா நிகழ்வுகளை கண்டு தரிசனம் செய்து கொள்ளுமாறு கோவில் நிறுவனம்  அறிவித்துள்ளது. மேலும் கோட்டைவாசல் முன்பாகவும், இக்கோயிலின் உப கோவிலான தல்லாகுளம் பெருமாள் கோவில், வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவில், முன்பாக அகன்ற வெண்திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது….

The post அழகர்கோயில் சித்திரை திருவிழா: செயற்கை வைகையில் இறங்கினார் கள்ளழகர்..! appeared first on Dinakaran.

Tags : Beautargoil Sitrishi Festival ,Artificial Vaig Madurai ,Anagargoil ,Beautargoil Siritra Festival ,Artificial Vaise ,
× RELATED மக்களவை தேர்தலில் மோடிக்கு நாட்டு...