×

கூடலூர் அருகே 2,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

கூடலூர்: கூடலூர் அருகே விவசாய நிலத்தில் 2,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அம்மாவாசி. விவசாயி. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் அருகில் உள்ள மட்டப்பாறை பகுதியில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. நேற்று முன்தினம் அந்த நிலத்தை சீர்படுத்தும் பணி நடந்த போது, புதைந்திருந்த  முதுமக்கள் தாழி ஒன்று கிடைத்தது. அம்மாவாசியின் குடும்பத்தினர் தாழியை மூடியிருந்த மண்ணை அகற்றினர். அந்த தாழியை வெளியில் எடுத்து பார்த்த போது, அதில் மனித எலும்புகள், மண் ஜாடி மற்றும் சிறு மண் பாண்டங்கள் இருப்பது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த தேனியை சேர்ந்த வைகை தொல்லியல் கழக அமைப்பினர், முதுமக்கள் தாழியை ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் வைகை தொல்லியல் கழக அமைப்பாளர் மோகன் குமாரமங்கலம் கூறியதாவது: இறந்தவர்களை தாழியில் வைத்து அடக்கம் செய்வது 2,500 ஆண்டுகள் பழமையானது. இங்கு கண்டெடுக்கப்பட்ட தாழியில் புதைக்கப்பட்டவரின் எலும்புகளும், அவரது ஈமச் சடங்குக்கு பயன்படுத்திய மண் பாண்டங்களும்  கிடைத்துள்ளன. தாழியின் உள்ளே பானைகள் வேதி வண்ணம் பூசப்பட்டவையாக உள்ளது ஆச்சரியமளிக்கிறது. பழங்காலத்தில் இந்த விவசாய நிலம் சுடுகாடாக இருந்துள்ளது. இதனால் இதனருகில் பழங்கால குடியிருப்பும் இருந்திருக்க வேண்டும். முதுமக்கள் தாழி கிடைத்த பகுதியின் அருகில் ஆய்வு செய்தால், கீழடியை போல் மேலும் ஒரு தமிழர் நாகரீக நகரத்தை கண்டுபிடிக்க முடியும்.

அருகில் உள்ள சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கூடலூர் திரள்மேடு, தம்மணம்பட்டி பகுதியில் நடத்திய ஆய்வுகளில் பழங்காலத்து கத்திகளும், வாள்களும், இரும்பு பொருட்களும் கிடைத்துள்ளன. இவை இரும்பு காலத்தை சேர்ந்தவை. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் இந்த ஊர்கள் அமைந்துள்ளன. பாண்டியர் மற்றும் சேரர் ஆட்சி காலங்களின் போது இந்த கிராமங்கள் வழியாக வணிகர்கள் பயணம் செய்திருக்க வேண்டும். கூடலூர் அருகே உள்ள எள்ளுக்காட்டுப்பாறை பகுதியில் சமண கோயில்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கண்ணகி கோயிலின் அடிவாரப் பகுதிகளில் ஈம சின்னங்கள் கிடைத்திருப்பது, இப்பகுதியில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வளமான சமூகம் வாழ்ந்ததற்கான ஆதாரமாக உள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்தார். முதுமக்கள் தாழி  கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று, கூடலூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : elders ,Cuddalore Cuddalore , Cuddalore, old-fashioned, old-fashioned
× RELATED ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மேலும் மூன்று முதுமக்கள் தாழிகள்