லண்டன் : லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி ஆய்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் அது மனிதர்களிடம் சோதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பிரிட்டன் வர்த்தக அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார். சோதனைகள் வெற்றியடைந்தால் வரும் செப்டம்பரில் பிரிட்டனில் உள்ள 3 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உலக அளவில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.இந்நிலையில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து முதல் கட்டமாக நல்ல பலனை அளித்துள்ளது. இதுதொடர்பாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாம் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்து கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கான திறனை பெற்றிருக்கும் அறிகுறிகள் தற்போது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நுரையீரலை மிகத் தீவிரமாக பாதிக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து குரங்குகளின் உடலில் செலுத்தப்பட்டபோது, கொரோனா வைரசால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை தடுத்து நிறுத்தி உள்ளது. அதேசமயம் இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை.கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் முதற்கட்ட வெற்றி எட்டப்பட்டு இருக்கிறது. ஆனாலும், மனிதர்களிடம் முழுமையாக சோதிக்காத வகையில் மருந்தின் தன்மையை உறுதி செய்ய முடியாது. மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பார்க்கும் சோதனைகளின் முடிவு அடுத்த மாதத்திற்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் அமைச்சர் அலோக் சர்மா
இந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக இருந்தால் செப்டம்பர் மாதத்திற்குள் பிரிட்டனில் உள்ள 30 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார்.‘மேலும் அவர் கூறுகையில்,கொரோனா வைரசை எதிர்த்துப் போராடும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் நமது விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் விரைவாக ஒன்றிணைந்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன்.மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மருந்து கண்டுபிடிக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வெற்றிகரமான கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம்’ என்றும் அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்தார்.