×

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி வறண்டு காணப்படும் ஏரிகள்

* ஊரடங்கும், வறட்சியும் சேர்ந்து வதைக்கும் பேராபத்து  
* கோடை மழை கை கொடுக்குமா?

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நீரின்றி வறண்டுவிட்டன. ஊரடங்கும், வறட்சியும் சேர்ந்து வதைக்கும் பேராபத்தில் விவசாயிகள் சிக்கியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், விவசாயத்தை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கிறது. செய்யாறு சிப்காட், ஆரணி கைத்தறி நெசவு தவிர இந்த மாவட்டத்தில் வேறெந்த பிரதான தொழில் வாய்ப்பும் இல்லை. அரிசி ஆலைகளை தவிர்த்து, சிறு, குறு தொழிற்சாலைகள் என குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை.எனவே, மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர், விவசாயத்தை சார்ந்தே வாழ்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக விவசாயமும் படிப்படியாக கைவிட்டுப் போனதால், பிழைப்புதேடி பெரு நகரங்களுக்கு கூலித்தொழிலாளர்களாக இடம் பெயர்வதும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக போதுமான மழையில்லை. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதுமான அளவில் கைகொடுக்கவில்லை. எனவே, மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகளில் குறைந்தபட்ச அளவே நிரம்பியது. தற்போது, மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள், கிணறுகள் ஆகிய விவசாய நீராதாரங்கள் படிப்படியாக வறண்டுவிட்டன. எனவே, இந்த ஆண்டு மிகக்கடுமையான துயரத்தை விவசாயிகள் சந்திக்கும் ஆபத்து எதிர்நோக்கியிருக்கிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் சரிந்திருக்கிறது. இந்த மாவட்டத்தின் பிரதான சாகுபடி பயிர்கள் நெல், மணிலா, கரும்பு மற்றும் தோட்டப்பயிர்கள். மானாவாரி மணிலா தவிர, மற்ற பயிர்களுக்கு தண்ணீர் தேவை அதிகம். எனவே, நெல் மற்றும் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
தென் மாவட்டங்களில் பெரும்பாலும் ஆற்றுநீர் பாசனம் சார்ந்த விவசாயம் நடக்கிறது.

ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம் குறைவு. ஏரிகள் மற்றும் கிணறுகள் மட்டுமே விவசாயத்தை வாழவைக்கும் நீராதாரங்கள். ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படும் திருவண்ணாமலை மாவட்டம் இந்த கோடையில் கடும் சோதனையை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 604 பெரிய ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள 1,361 சிறிய ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. நீரை வெகுவாக உறிஞ்சும் தன்மைகொண்ட வேலிக்காத்தான் முள்மரங்கள், பெரும்பாலான ஏரிகளிள் அடர்ந்து வளர்ந்திருக்கிறது. எனவே, ஏரிகளின் நிலத்தடி தன்மையே முற்றிலும் மாறியிருக்கிறது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை, செண்பகத்தோப்பு அணை, குப்பனத்தம் அணை, மிருகண்டா அணை ஆகியவற்றில் குறைந்தபட்ச அளவில் மட்டுமே நீர் இருப்பு உள்ளன. சாத்தனூர் அணையில் உள்ள தண்ணீர், குடிநீர் திட்டங்களுக்கு மட்டுமே ேபாதுமானதாக இருக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆண்டு கோடை மழையும் இதுவரை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்ைல. வெப்பத்தை தணிக்கும் நிலையில் மட்டுமே கோடை மழை பெய்தது. மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் குறைந்தபட்ச அளவு தண்ணீரும் இருப்பு இல்லை. எனவே, மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளின் நிலை பரிதாபமாக மாறியிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கும் போது, விவசாயிகளின் வாழ்க்கை திண்டாட்டத்தில் சிக்கித்தவிப்பது வழக்கம். ஆனால், தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல், தொடர்ந்து 45 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் ஊடரங்கு உத்தரவு, விவசாய பணிகளை மேற்கொள்வதில் கடும் சிக்கல், விளை பொருட்களுக்கான விற்பனை வாய்ப்புகள் பறிபோனது என மிகக்கடுமையான இடியாப்ப சிக்கலில் விவசாயிகள் சிக்கியுள்ளனர். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விரிவான திட்டங்களையும், மானியங்களையும் அறிவிக்க வேண்டியது அரசின் அவசர பணியாகும். விவசாயிகளின் நலனில் அலட்சியம் காட்டுவதும், உதவிகள், நிவாரணம் வழங்குவதில் தாமதிப்பதும் ஒட்டுமொத்த சமூகத்தின் சிக்கலை மேலும் அதிகரிக்கவே செய்யும் வாய்ப்பு உள்ளது.

Tags : lakes ,Thiruvannamalai district , Dry , dry lakes , Thiruvannamalai district
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!