×

இன்று உலக அருங்காட்சியக தினம்

* விஷ வளையல், அபூர்வ கால்குலேட்டர் உள்ளிட்ட அரிய பொருட்களின் படங்கள் குவிந்தன
* நெல்லை அருங்காட்சியக வலைதளத்தில் விரைவில் பார்க்கலாம்

நெல்லை: உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு  500க்கும் மேற்பட்டோர் தங்களிடமுள்ள அரிய பொருட்களின் புகைப்படங்களை நெல்லை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தனர். இவை மெய்நிகர் கண்காட்சியாக அருங்காட்சியகத்தின் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் தேதி உலக அருங்காட்சியக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் சமூக வலைதளங்கள் வழியாக இத்தினத்தை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.  அதுபோன்றே ஒரு முயற்சியாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் ‘எனது அரும்பொருள்’ என்ற தலைப்பில் ஒரு போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.

 போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களின் முன்னோர் பயன்படுத்திய, தற்போது தம்மிடமுள்ள அரும் பொருளை புகைப்படம் எடுத்து விளக்கத்துடன் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களிடம் உள்ள அரும் பொருள்களை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளனர். ஏராளமான மாணவ, மாணவிகள் அப்பொருள்களை பற்றியும் அவற்றின் பயன்பாடு குறித்தும் வீடியோ எடுத்து அனுப்பி உள்ளனர். தங்கள் வீட்டிலுள்ள அரும் பொருளை தேடி சுத்தம் செய்து, பெரியவர்களிடம் அதுகுறித்த விவரங்களை கேட்டு கட்டுரையாகவே பலர் அனுப்பியுள்ளனர். ஏராளமான கல்லூரி பேராசிரியர்களும் ஆர்வமுடன் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவில் உள்ள நெல்லை வாழ் தமிழர் ஒருவர் தங்கள் முன்னோர் பயன்படுத்திய பழங்காலத்து கால்குலேட்டர் கருவியினை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். பெல்  நிறுவன உரிமையாளர் குணசீலன் செல்லத்துரை தன் வசமுள்ள பழங்காலத்து தொலைபேசி, கையால் செயல்படுத்தப்படும் ஸ்டேபிளர், பழங்காலத்து கேமரா போன்ற அரிய பொருள்களை புகைப்படம் எடுத்து அனுப்பினார். சிவகாசி பகுதியை சார்ந்த ராஜ ராஜன், அரும்பொருள் சேகரிப்பாளர் சங்க கால மக்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், பாரம்பரிய நெற்றி பொட்டு குடுவை, போர் காலத்தில் ராணிகள் விஷம் வைக்கும் வசதியுள்ள வெள்ளி வளையல் போன்ற அரும் பொருட்களின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

மேலும் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அம்மி, ஆட்டு உரல், திருவை, அளவைகள், பித்தளை சாமான்கள், மரப்பெட்டிகள், பல்வேறு விதமான மர சாமான்கள், ஏராளமான விளக்குகள், தங்கள் முன்னோர் பயன்படுத்திய நாணயங்கள் என  புகைப்படங்களை ஆர்வமுடன் அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் அனுப்பிய புகைப்படங்களை மெய்நிகர் கண்காட்சியாக (virtual exhibition) நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும்.  ஊரடங்கு முடிந்தபின் அருங்காட்சியகம் திறக்கப்பட்டதும் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்வில் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று காப்பாட்சியர்     சிவ. சத்திய வள்ளி தெரிவித்தார்.

Tags : World Museum Day , Today,World Museum Day
× RELATED உலக அருங்காட்சியக தினம் : நெல்லையில்...