×

சங்குத்துறையில் சுற்றுலா கட்டுமானங்கள் இடிந்தன குமரி மாவட்டத்தில் திடீர் கடல் சீற்றம்: புத்தன்துறையில் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம்

நாகர்கோவில்: வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற நிலையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த புயல் வரும் 20ம் தேதி புவனேஸ்வரில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அன்று வரை குமரி மாவட்டத்திலும் தொடர்ந்து கடல் சீற்றம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடல் சீற்றம் காரணமாக குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை பகுதியான சங்குத்துறை பகுதிகள் மணல் அரிக்கப்பட்டு சாலை பகுதி வரை கடலுக்குள் இடிந்து விழுந்து வருகின்றன. இதனால் இங்கு சுற்றுலா திட்டங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கட்டுமானங்கள் அனைத்தும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளன. தற்போது புத்தன் துறை வரை இதன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  சாலை வரை கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலை உடைப்பு ஏற்பட்டால் ஊருக்குள் எளிதாக தண்ணீர் புகுந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆஸ்டின் எம்.எல்.ஏ நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சங்குத்துறையில் இருந்து புத்தன் துறை வரை கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.  இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இதே நிலை தொடர்ந்தால் வீடுகளுக்கும் தண்ணீர் வந்து பாதிப்பை ஏற்படுத்தும். சங்குத்துறை பாதிப்பு தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ஏற்கனவே மதிப்பீடு எடுத்தார்கள். இருப்பினும் ஒன்றரை மாதமாக பணிகள் நடக்கவில்லை. எனவே தற்காலிகமாக கல் போட்டு பின்னர் தூண்டில்வளைவு அமைத்தால் இந்த பகுதி மீனவர்கள் தொழில் செய்ய இயலும். இவ்வாறு அவர் தெரிவித்தார். திமுக ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், ஊராட்சி தலைவர் ஆன்றனி, ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புத்தன்துறையில் வசந்தகுமார் எம்.பி ஆய்வு
புத்தன்துறையில்  கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வசந்தகுமார் எம்.பி நேற்று காலை  நேரில் பார்வையிட்டார். பின்னர் அந்தபகுதியில் பொதுமக்களிடம் குறைகளையும்  கேட்டறிந்தார். கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த  பகுதி மக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு  தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக வசந்தகுமார் எம்.பி  உறுதியளித்தார். புத்தன்துறை பங்குதந்தை காட்பிரே, கிழக்கு மாவட்ட  காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகிகள் அசோக்ராஜ்,  னிவாசன், லாரன்ஸ், ஆனந்த், ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ரூ.35 லட்சம் செலவில் கடலரிப்பு தடுப்புச்சுவர்
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  புத்தன்துறை பகுதியில், கடலரிப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் வீடுகள் பாதிப்படையும் சூழ்நிலையில் உள்ளது.  வருவாய்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு, கடலரிப்பு ஏற்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதோடு அப்பகுதியில் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்டுவதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்து, அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன். பொதுப்பணித்துறை அலுவலர்கள் கடலரிப்பு ஏற்பட்ட பகுதியில் தடுப்புசுவர் அமைக்க ரூ.35 லட்சத்தில் திட்டமதிப்பீடு தயார் செய்து, சென்னை, பொதுப்பணித்துறைக்கு அனுப்பியுள்ளார்கள். மீனவ மக்களின் நலன்கருதி, உடனடியாக  தடுப்புசுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : tourism boom ,Kumari ,district ,Town , Sudden sea ,Kumari district, Risk , flooding ,town
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...