×

ஊரடங்கு தளர்ந்த பின் பக்தர்கள் அனுமதி ஏழுமலையானை தரிசிக்க எல்லைக்கோடுகள் தயார்: விரைவில் தேதி அறிவிப்பு

வேலூர்:  ஊரடங்கு தளர்ந்த பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் கோயிலில் எல்லைக்கோடுகள் வரையப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் 20ம் தேதி முதல் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் உள்ள நிலையில் விரைவில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதையொட்டி ஏழுமலையான் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, கோயில் நுழைவு பகுதியில் இருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கும் இடம் வரை பக்தர்கள் ஒரு மீட்டர் இடைவெளியுடன் நின்று செல்லும் வகையில் எல்லைக்கோடுகள் வரையப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி தரிசனம் முடித்த பக்தர்கள் சமூக விலகலை கடைபிடித்து லட்டுகளை வாங்கும் விதமாக கவுண்டர்களிலும் எல்லை கோடுகள் வரையப்பட்டு உள்ளது.

மேலும், பக்தர்களை சுரங்க மூலிகை கிருமிநாசினி வழியாக அனுமதித்து சுவாமி தரிசனம் செய்யவும், பக்தர்கள் அவ்வப்போது கைகளை சுத்தமாக வைத்திருக்கவும் ஆங்காங்கே கைகழுவும் வசதிகளை கோயில் அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.  இதனால் பக்தர்கள் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : pilgrims , curfew, the pilgrims, ready, coming , Border Line
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்