×

பர்கூர் காப்புக்காட்டில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி மும்முரம்: வனத்துறை நடவடிக்கை

கிருஷ்ணகிரி: பர்கூர் காப்புக்காட்டிலுள்ள தொட்டிகள், குட்டைகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்குட்பட்ட பர்கூர் காப்புக்காடு 1,555 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மான், காட்டுப்பன்றி, முயல், கீரி மற்றும் மயில், காடை, கவுதாரி, காட்டுக்கோழி உள்ளிட்ட வனவிலங்கினங்கள் மற்றும் பல்வேறு பறவைகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது மழையின்றி கடும் வெயில் வாட்டி வதைத்து வருவதால், காடுகளில் தண்ணீரின்றி குட்டைகள் முற்றிலும் வறண்டு போய் காணப்படுகிறது. இதனால், பர்கூர் சரகத்திற்குட்பட்ட காப்புக்காடுகளில் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

அதன்படி, பர்கூர் வனச்சரக அலுவலர் சக்திவேல் தலைமையில், பர்கூர் வனவர் ஹேமலதா, வனக்காப்பாளர்கள் ரமகத்துல்லா, அங்குரதன், சிவக்குமார், வனக்காவலர் ராஜப்பன் ஆகியோர் பர்கூர் அடுத்த வரட்டனப்பள்ளி காப்புக்காடு அக்னி மாரியம்மன் கோயில் கால் பாதை சரகத்தில் உள்ள மான் தொட்டியிலும், பாறையில் இயற்கையாக அமைந்துள்ள பள்ளத்திலும் டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்பினர். இதேபோல், 1232 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள பர்கூர் நந்திபண்டா காப்புக்காட்டில், ஒப்பதவாடி கூட்டு ரோடு அருகில் உள்ள தடுப்பணையில் மழை நீர் தேங்கியுள்ளதையும் வனத்துறையினர் பார்வையிட்டனர்.Tags : Barkur ,Forest Department ,Filling of Water: Forest Department , Filling , water , Barkur insulation,Forest Department action
× RELATED மார்த்தாண்டத்தில் சாலையில் ஓடும் அணை...